சங்கிலி பூதத்தார் சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி கரைக்கு வந்த வரலாற்றை பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் திருச்செந்தூர் மற்றும் திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலில் அவரது அரசாட்சி எப்படி நடக்கிறது என பார்க்கப்போகிறோம்.
அடக்க முடியாத ஆவேசத்துடனும் ஆக்ரோசத்தோடும் திருச்செந்தூர் வந்தார் சங்கிலி பூதத்தார். அவரை முருகப்பெருமான் அமைதிபடுத்தினார். தன் சகோதரனை அழைத்து வந்து கோயில் மூலஸ்தானத்திலும், கோபுர வாசலிலும் பக்தர்கள் தங்கும் மடங்களிலும் கடற்கரை நாழிகிணற்றிலும் மற்றும் ஊருக்கு உள்ளேயும் வெளியேயுமாக இருபத்தி ஒன்று நிலையங்களை உருவாக்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக பூதத்தாரை இருக்கச் செய்தார்.
கைலாயத்திலும், பர்வத மலையிலும் குளுமையாக இருந்த பூதத்தாருக்கு கடற்கரை சூடு பிடிக்காமலும் நியாய தர்மத்தில் சிறந்த வீரபாகுத் தேவருக்குப் பின் புதிதாக வந்த ஊழல் தர்மகர்த்தாவான பழனியாப்பிள்ளை போட்ட கல், மண் கலந்த நைவேத்தியங்களாலும் வயிற்றுவலி சங்கிலி பூதத்தாருக்கு வந்துவிட்டது. தவறு செய்பவர்களை தான் கண்டாலே சங்கிலி பூதத்தாருக்கு பிடிக்காதே. முருகப்பெருமானிடம் தகவல் கூறிவிட்டார். தவறுசெய்த தர்மகர்த்தாவையும் தண்டித்தார். பின் அங்கிருந்து கிளம்பினார்.
குளுமையான இடத்தினை தேடினார். சலசலவென்று ஓடும் மலை அருவியும், ஓங்கி வளர்ந்த மரங்களால் எப்போதுமே நிழலாக காட்சி தரும் களக்காடு மலைக்கு வந்தார். அங்கு சலசலத்து ஓடும் நம்பியாற்றை கண்டார். அந்த நதியில் மூழ்கி குளித்தார். தனது உடல் சூட்டை தணிக்க வசதியாக ஆற்றங்கரை மேலிருந்த பாறையில் சங்கிலியால் ஒங்கி அடித்து ஒரு பெரிய கசத்தை உருவாக்கினார். ஆற்றுக்குள் இருக்கும் ஆழம் அறியமுடியா இடம் தான் இந்த கசம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் தெளிந்த நீரோடையாக ஓடும் நம்பியாற்றின் கரையில் மூன்று நிலையங்கள் அமைத்து அமர்கிறார் சங்கிலி பூதத்தார்.
சங்கலியால் ஓங்கி அடிக்கும் சத்தமும், கடும்பாறையானது பொடி பட்டு கசத்தில் நீர் பொங்கிப் பிராவாகமாய் பெருக்கெடுக்கும் சப்தமும் கேட்டு, கோயிலுக்கு வெளியேவந்து பார்த்தார். திருமலை நம்பி . “இது யாருடா. இங்கே வந்து வீர தீரங்களை காட்டுவது ?” என விசாரித்தார். சங்கிலி பூதத்தார் பெருமாள் முன்பு வந்து நின்றார். “நான் சிவபெருமானின் பிள்ளை. தாங்களோ என் தாய் மாமனார்”. என்று விவரம் கூறினார். “திருச்செந்தூரில் பிள்ளைவாலால் ஏற்பட்ட வயிற்றுவலியை நீங்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
பெருமாளும் தாயாரும் பூதத்தாரானா மருமகனுக்கு நோயை தீர்த்து கொடுத்து விட்டு, மலை கீழே உள்ள நம்பி கோயிலுக்கு காவல் தெய்வமாக அனுப்பி வைத்தனர். கோயிலை சுற்றி திருக்குறுங்குடியில் ஏழு நிலையங்கள் போட்டுக்கொடுத்து வணங்க செய்தனர்.
திருக்குறுங்குடியை பொறுத்தவரை சங்கலி பூதத்தார் மிகவும் விசேசமாக போற்றப்படுவார். நம்பி மலையில் நம்பி யாற்றங்கரையில் மலை மேல் நம்பி கோயிலில் சங்கிலி பூதத்தார் ஆலய திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது சாமி கொண்டாடிகள் நம்பியாற்றில் சுவாமி சங்கலி பூதத்தாராமல் உருவாக்கப்பட்ட ஆழம் அறிய முடியாத கசத்தில் குதித்து, தங்களது மூச்சை அடக்கி கசத்தின் அடியில் கிடக்கும் சங்கிலி எடுத்து வருவர்.
அதே போல் நம்பிக்கோயிலில் மலை மேல் நம்பிக்கு சனிக்கிழமை தோறும் கருடசேவை நடைபெறும் . அப்போது சங்கிலி பூத்தத்தார் கோமரத்தாடி, பெருமாளிடம் உத்தரவு வாங்கி பூசாரி தேங்காய் பழம் கொடுக்க அதை வாங்கி கொண்டு கருடசேவை சப்பரம் முன்பு சங்கலியால் தனது மார்பிலும் முதுகிலும் ஆங்கிரோசமாக தாக்கிகொள்ளும் பக்தர்களை காண கண்கோடி வேண்டும்.
சாதரணமாக ஒரு இரும்பு பொருள் நமது மார்பில் விழுந்தால் அனைத்தும் நொறுங்கி விடும். அதே போல் முதுகில் சங்கலி அடிபடும் போது அதன் சத்தம் நம் காதில் விழும் சத்தத்தை வைத்துப் பார்க்கும் போது முதுகு ரத்த களரியாகி விடுமோ என எண்ணத்தோன்றும். ஆனால் சங்கலி பூதத்தார் புண்ணியத்தில் அவர்களுக்கு எதுவுமே ஆக வில்லை என்பது இந்த உலகத்தில் நடைபெறும் மிகப்பெரிய அதிசயம் என்றே கூறலாம்.
ஒருசமயம் நான் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடருக்காக நம்பினால் நம்புங்கள் என்ற நிகழ்ச்சிக்காக இதுபோன்ற சுவாமி ஒருவரை படமெடுக்க சென்று இருந்தேன்.
கோயிலுக்கு நுழையும் முன்பே பாலத்தின்அருகில் இடது புறமாக திரும்பினால் அங்கே சங்கிலி பூதத்தார் அமைதியின் சொரூபமாய் தன்னை தேடி வரும் பக்தர்களுக்குவேண்டிய அருள் தரும் பக்தராய் காட்சியளிக்கிறார். அவருக்கு அன்ன படையல் இட்டு மக்கள் வணங்குகிறார். அலங்கரித்த நிலையில் வெள்ளி கவசத்துடன் கம்பீரமாக காட்சி தருவார்.
அவர் அருகில் சங்கலி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். சங்கிலி பூதத்தார் அருள் பெற்றவர்கள், அந்த கம்பியை எடுத்து தங்களது மார்பிலும், முதுகிலும் தாக்கி கொள்கிறார்கள்.
இந்த இடத்தில்தான் வழுக்கு பாறை அருகில் தான் மிகவும் ஆழமான கசம் ஒன்றுள்ளது. இந்தக் கசத்தில்தான் கடந்த ஆண்டு தண்ணீருக்குள் சங்கலியை போட்டு வைத்திருப்பார்கள். ஆதாளி வந்த சங்கிலி பூதத்தார் கேமாரத்தான்கள் அந்த கசத்துகக்குள் டைவ் அடித்து விழுகிறார்கள். அதன் பின் ஆழத்துக்குள் சென்று அங்கிருந்த சங்கலியை தோளில் போட்டுக்கொண்டு வெளியே வருவார்கள். கிட்டத்தட்ட 10 நிமிடம் மூச்சை அடக்கி கொண்டு அவர்கள்அந்த அதாள பாதாளத்தில் தண்ணீரில் மூழ்கி கம்பியை எடுத்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே நீந்தி வெளியே வருகிறார்கள்.
பாரம் தாங்கிய சங்கிலி கழுத்தில் கிடக்கும் போது எப்படி நீந்தி வர முடிகிறது என்பது தான் நம்மமுடியாத ஒன்றாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் நடக்கும்போது மிகவும் அதிர்ச்சியாகவே நமக்கு தோன்றுகிறது.
களக்காடு அருகில் உள்ள மீனவன்குளத்தினை சேர்ந்தவர் தான் எங்களோடு வந்திருந்து சங்கிலியை எடுத்தார். நாங்கள் தண்ணீருக்குள் மூழ்கி படம் எடுக்க பிரோயோத்யோக கமராவை பயன்படுத்தினோம். எனவே காட்சிகள் மிகப் பிரமாண்டமாக படம் மெடுக்கப்பட்டது.
அதன் பின் கரை மேல் வந்து சங்கலியில் மார்பிலும் முதுகிலும் தாக்கி கொண்டார்.அதோடுமட்டுமல்லாம் அவருடன் வந்த மற்றொரு நண்பரும் அதுபோலவே சங்கலியை எடுத்து மார்பிலும் முதுகிலும் தாக்கிகொண்டார்.
இந்த சங்கிலி பூதத்தார் குறித்து இங்கு பல் கருத்துகள் தெரிவித்து வருகிறது.
அதில் ஒரு கருத்து குறித்து பேசுவோம். இப் பகுதியில் “கொடமாடி” என்று அழைக்கப்படும் இடத்தினைப் பற்றி கர்ணபரம்பரை கதை கூறப்படுகிறது. இதுவும் சங்கிலிபூதத்தாரை பற்றியது தான்.
இந்த வரலாறும் மிக வித்தியாசமானதுதான்.
திருக்குறுங்குடி நம்பி கோயிலில் கொடிமரம் வைப்பதற்கு தேவையான மரத்தினை வெட்டி வந்தார்கள். அப்போது அந்த மரத்தில் ஐந்து தேவதைகள் உடன் வந்தனர். அவர்கள் கால பைரவர், வடக்கு வாசல் மாடன், சங்கிலி பூதம், குறுங்குடி அம்மன், குத்துப்பிறை இசக்கியம்மன் ஆகியோர் ஆவார்கள். இதில் கால பைரவர் மிகத்துடியான காவல் தெய்வமாவார். பழங்காலத்தில் நம்பி கோவிலுள்ள சந்நிதியின் கதவு மூடப்பட்ட பின், சாவிக் கொத்தைக் கால பைரவர் காலடியில் வைத்து விடுவார்கள். அதன்பின் அதிகாலை வரை கால பைரவர் பாதுகாப்பில் அந்த சாவி கொத்து இருக்கும். இது தான் ஐதீகம்.
முன்னொரு காலத்தில் பூசாரி ஒருவர் கோவிலின் கதவுகளை மூடிவிட்டு சாவியை முறைப்படி கால பைரவர் காலடியில் வைத்து விட்டு வீடு திரும்பினார். பூசாரியின் மனைவி, கணவன் மட்டும் வருவதைக் கண்டு திடுக்கிட்டாள். “நீங்கள் உடன் கூட்டிச் சென்ற மகன் எங்கே..?” என்று நெஞ்சு பதைபதைக்க கேட்டாள். அப்போதுதான் பூசாரிக்குத் தன் சிறு வயது மகன் கோவிலுக்குள் படுத்து உறங்கி விட்டது ஞாபகம் வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுவரை பூட்டிய கோயிலைத் திறந்தது கிடையாது. ஆனால் மகனை உடனே பார்க்க வேண்டும் என்று பூசாரியின் மனைவி அடம் பிடித்தாள்.
பூசாரி அவளிடம், “எம்பெருமான் நம்பிராயரின் அருளினாலும், கால பைரவர் பாதுகாப்பிலும் அவன் பத்திரமாக இருப்பான், காலையில் சென்று கதவைத் திறக்கலாம்” என்று கூறினார். பூசாரி தன் மனைவியை எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவள் கேட்க வில்லை. வேறு வழியில்லாமல் பூசாரி நடுநிசிவேளையில கோவிலுக்குச் சென்றார். மரபை மீறி சாத்திய நடையை மீண்டும் திறக்க முற்பட்டார். அப்போது கால பைரவர் குரல் உள்ளிருந்து அவரை எச்சரித்தது. “காலையில் உன் மகன் பத்திரமாக உன்னிடம் வந்து சேர்வான், கவலை வேண்டாம்” என்று கூறியது. ஆனால் அதையும் கேட்காமல் பூசாரி பிடிவாதமாகச் சாவி கொத்தை எடுத்து கதவைத் திறந்தார். இதனால் கோபமடைந்த கால பைரவர் பூசாரியின் குழந்தையைப் பல பாகங்களாக பிரித்து எறிந்து விட்டார். கடவுளின் திருவாக்கையும் சக்தியையும் நம்பாத பூசாரி தனக்குக் கிடைத்த தண்டனையை எண்ணி வருந்தினார்.
பெருமாளின் பாதம் பணிந்து மன்றாடினார். அவரை மன்னித்து அவரின் மகனை மீண்டும் உயிர் பிழைத்து வருமாறு அருளினார். அதன் பின் தலைமைப் பூசாரியின் கனவில் தோன்றினார் பெருமாள். “கால பைரவரின் ஆக்ரோச சக்தியை விரைவில் கட்டுப்படுத்துவேன்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். அதன்படி மலையாள நம்பூரிதிகள் கால பைரவரின் சக்தியை ஆவஹனம் செய்து குடத்தில் அடைத்தனர். பின் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் கொண்டு புதைத்து விட்டார்கள். ஆனாலும் இந்தக் குடம் ஆடிக்கொண்டே இருந்ததாம். ஆகவே இந்த இடத்துக்குக் கொடமாடி என்று பெயர். தற்போது இந்த இடத்தில் தான் கொடுமுடியாறு (கொடமாடி) அணையும் கட்டப்பட்டுள்ளது. இந்த கொடமாடி அணையும் அதில் அபூர்வமான ஆனையடி தம்பிரான் என்னும் அணைகரைக்குள் அமர்ந்த கோயிலும் உள்ளது. அந்த ஆலயத்தில் மூலவரே கிடையாது. ஆணையடி தம்பிரான்கோயிலை பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம்.
நம்பிசாமி கோயிலைப் பொறுத்தவரை எந்தப் பெருமாள் கோயிலும் இல்லாத போதும் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை தோறும் கருடசேவை நடந்து வருகிறது என்று கூறினோம் அல்லவா?. தற்போது அனைத்து சனிக்கிழமைகளும் இந்தக் கோயிலில் கருடசேவை நடக்கிறது . கட்டளைதாரர்கள் இந்த கருட சேவையை நடத்த காத்துக் கிடப்பதால் இது போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் எல்லா சனிக்கிழமைகளிலும் இங்கு அன்னதானம் வழங்கவும் பக்தர்கள் மும்முரமாக உள்ளனர். தொடர்ந்து திருமலை நம்பியின் கட்டளைதரார்கள் அவருக்கு சேவை செய்ய காத்து கிடப்பதால் தினமும் கருடசேவை நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று இந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் கூறுகின்றனர். இந்தக் கோயிலைப் பொறுத்தவரை உறியடி விழா மிக சிறப்பானதாகும். இந்த உறியடி விழா ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை நடக்கிறது. இந்த விழாவைக் காண பல ஆயிரம் பக்தர்கள் திருமலை நம்பி கோயிலுக்கு வந்துச் செல்வார்கள்.
சரி இருககட்டும் .இங்கிருந்து சங்கிலி பூதத்தார் எப்படி தாமிரபரணி ஆற்றங்கரைககு வந்தார்?. அதைப்பற்றி தொடர்ந்து காணலாம்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)


