
நாளை மறுதினம் இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே பனை ஓலையில் தேசியக் கொடியை செய்து தனது வீட்டில் ஏற்றியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. பனை தொழிலாளியான இவர் தற்போது பனை ஓலையில் பல்வேறு பொருட்களை செய்து அசத்தி வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி உருவத்தையும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவத்தையும் பனை ஓலையில் செய்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது 75 வது சுதந்திர தின விழாவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்து பனை ஓலையால் தேசத்தலைவர்கள் படத்தை ஏற்றி அலங்கார வளைவு செய்து அசத்தியுள்ளார். அந்த வளைவில் 75வது சுதந்திர தின விழா நினைவு வளைவு என்றும், 1947&2022 என்றும் பனை ஓலையில் வரைந்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் அந்த வளைவின் உள் பகுதியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காமராஜரின் உருவத்தையும், ஏவுகனை நாயகன் அப்துல்கலாம் அவர்களின் உருவத்தையும் வைத்து அசத்தியுள்ளார். மேலும் அவரது வீட்டின் முன்பு பனை ஓலையால் செய்யப்பட்ட தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார். இது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


