கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டம் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சிலுவை ஸ்டூவண்ட் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நன்றாக படித்து எதிர்காலத்தில் நல்லதொரு அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். திட்டமிட்டு படித்தால் அரசு உயர் பதவிகளையும் அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கக் கேடினை தவிர்க்க வேண்டும். சிறு வயதில் போதை வஸ்துகளுக்கு அடிமையாகக் கூடாது. பள்ளிகளில் சாதி கயிறு பல வண்ணங்களில் கட்டி வரக்கூடாது. பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு நற்பெயரை வாங்கி தர வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது பள்ளிகளில் சாதி பெயரைச் சொல்லி மற்ற மாணவர்களிடையே கழகத்தை ஏற்படுத்தக் கூடாது, ஆசிரியர்களை மிரட்டக்கூடாது, என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் மாணவ மாணவிகள் டிஎஸ்பி மாயவன் தலைமையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சப் இன்ஸ்பெக்டர்கள் கருத்தையா, கண்ணையா, மற்றும் போலீசார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


