உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொது செயலாளர் பாலு, தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், சில்வர் பாண்டியன், துரை சரவணன், மணி, ஹரிஹரன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும், அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும், அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை தண்டித்திட வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய இட ஒதுக்கீடு வழங்கிட கோரி தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.


