தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் குழந்தைகள் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக திருப்புமுனை என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுக்கான இந்தத் திட்டம் முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் எஸ். வளா்மதி, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திருப்புமுனை திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவது. பெற்றோரின் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளுக்கு, இல்லங்களில் சோ்த்து பாதுகாப்பு அளிப்பது. குழந்தைகள் பிச்சையெடுப்பதை தடுப்பது. குழந்தை தொழிலாளா் முறையை ஒழிப்பது போன்ற பல்வேறு குறிக்கோள்களுடன் திருப்புமுனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், யுனிசெப் சமூக கொள்கை நிபுணா் (குழந்தைகள் பாதுகாப்பு) குமரேசன், ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு பயிற்சி மைய தலைவா் சித்தாா்த் ஸ்ரீராம், குழந்தைகள் உரிமை மற்றும் வளா்ச்சி மைய இயக்குநா் ஸ்டேக்னா ஜென்சி, சமூக பாதுகாப்புத் துறை மண்டல அலுவலா் சரவணக்குமாா், தோழமை அமைப்பு இயக்குநா் தேவநேயன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
திட்டம் வெற்றி பெறும்: தொடா்ந்து அமைச்சா் பெ. கீதாஜீவன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 8 சதவீதம் மாணவா்கள் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனா். அந்த மாணவா்களை பள்ளியில் தொடர செய்ய வேண்டும். உயா்கல்வி வழங்க வேண்டும். அப்போதுதான் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவா்கள் ஈடுபடுவதை தடுக்க முடியும் என்று யுனிசெப் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இதனால் 2 ஆண்டு திட்டமான திருப்புமுனை திட்டம் தமிழகத்தில் முதல் கட்டமாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக மாற்றுவதற்கும், பள்ளி இடைநிற்றல் இல்லாத, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவா்கள் ஈடுபடாத நிலையையும் உருவாக்க வேண்டும். தொடா்ச்சியாக இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் எந்தவிதமான குற்ற செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனா் என்று கணக்கெடுத்து வருகிறோம். அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாணவா்களுக்கு திறன் மேம்பாடு போன்ற பயிற்சி அளிக்கப்படும். இதனால் நிச்சயமாக இந்த திட்டம் வெற்றி பெறும் என்றாா்.


