தூத்துக்குடியில் ஆஷ் துரை நினைவு மண்டபத்தை மக்கள் வரி பணத்தில் புதுப்பிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் தொழில் பிரிவு கொம்பன் கே. பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனு : தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக ஆங்கிலேயன் ஆஷ் துரை நினைவு மண்டபத்தை புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மண்ணில் பிறந்து இந்திய தேசிய விடுதலைக்காக போராடிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் தான் இந்த ஆஷ் துரை.
ஆஷ் துரை சுதந்திர போராட்ட வீரர்களை அடக்குவதிலும் அவர்களுக்கு கொடூரமான கண்டனைகள் வழங்குவதிலும் தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வந்தார். சுதந்திர போராட்ட வீரர்களை கொடூரமான முறையில் அடக்க முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதோடு தன்னையும் சுட்டு மாய்த்துக்கொண்டார் வாஞ்சிநாதன். தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தூத்துக்குடியில் உள்ள ஆஷ் துரை நினைவு மண்டபத்தை சீரமைக்கும் பணியை தற்போது மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இது நம் தூத்துக்குடி மண்ணில் சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சிதம்பரனார், மாவீரன் வீர பாண்டிய கட்டபொம்மன், மாவீரன் புலித்தேவன், மாவீரன் அழகுமுத்து கோன், மகாகவி பாரதியார் போன்ற மாபெரும் தேச தலைவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த இடத்தில் வாஞ்சிநாதன் திருவுருவ சிலையை அமைத்திடவும் அந்த இடத்திற்கு வ.உ.சிதம்பரனார் பூங்கா என்று பெயர் மாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


