ஒவ்வொரு நிமிடமும் பெண் குழந்தைகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்படவேண்டிய அவலம் மனித சமூகத்தில் கட்டாயமாகி விட்டது.
பிறந்த குழந்தை முதல் நூறு வயது கிழவி வரை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு உடமைபோல ஆகிவிட்டது.
அதுசரி யாரிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நிலை? வேறு யாரிடமும் அல்ல. மனித இனத்தின் சரிபாதி நிலையில் இருக்கும் ஆணினத்திடமிருந்து தான் என்று உணரும் போது வெட்கக்கேடாக உள்ளது.
பெண் பிறந்தது முதலே ஆணின் பாலுணர்வு பசிக்கான ஒரு பண்டமாக பார்க்கப்படும் நிலையே இதற்கான காரணம்.
சமூகத்தில் ஒட்டுமொத்த ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால் அறிவீனமானோர் மற்றும்
மனநலத்தில் கோளாருடையவர்கள், பாலியல் ரீதியான அறிவில் குறைந்தோர், அன்பற்ற தன்மையுடையவர்கள் போன்றவர்களால் தான் குழந்தைகள்கூட பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி செத்து மடிகின்றனர்
காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்யும் மடையன்களை நம் சமூகத்தில் அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.இத்தகைய மனநிலையிலுடையவர்களை எந்த லிஸ்டில் வைப்பது? திட்டமிட்டு அன்புக் காட்டி அடைத்து வைத்து துன்புறுத்திய கயவர்கள் அறிவிலும் மனிதாபிமானத்திலும் முற்றிலும் குறைந்த மாக்கள் தானே?
ஆறு வயது குழந்தையைத் தன் பாலியல் இச்சைக்கு பலியாக்கும் ஆண் மனநலமுடையவனாக இருக்க முடியுமா?
இத்தகைய ஆண்கள் எங்கிருந்து தவறான சிந்தனைகளைப் பெற்றார்கள்?
சமூகத்திலிருந்தா? குடும்பத்திலிருந்தா? வளர்ப்பு சரியில்லையா? மரமணுக்கள் பிரச்சனையா? அறிவியலாளர்கள் கூற்று போல் ஹார்மோன்கள் பிரச்சனையா? எதுதான் பிரச்சனை?
மொத்தத்தில் அன்பற்ற தன்மை. பிறர்நலம் குறித்த சிந்தை சற்றேனும் இல்லாத அறிவிலிகள். *தன்னைத் தானே கட்டுப்படுத்தக் கற்காத அல்லது கற்க விரும்பாத தான்தோன்றிதனம்* தான் காரணங்கள்.
சட்டங்கள் ஏராளம் இருந்தாலும் நடைமுறைபடுத்தப்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் சமூகத் தடைகளும் பெருந்தடைகளாக நிற்கின்றன.
எவனோ ஒரு காமுகனால் பாலியல் துன்புறுத்தலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையை ,அக்கொடுமையை வெளியில் கூறினால் அவமானம் என்றும் கற்பு போய்விட்டதாக சமூகம் பார்க்குமே என்ற அறியாமையும் தான் மீண்டும் மீண்டும் இத்தகைய மனநிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சர்வசாதாரணமாகத் தவறுகளை செய்து ஒழிந்து கொள்ள வழிவகுக்கிறது.
இத்தகைய அறியாமையே விஷப்பாம்பை சமூகத்தில் வீட்டிற்குள்ளேயே ஒளித்துவைத்து வேடிக்கைப்பார்க்கும் செயலுக்கு காரணமாகி விடுகிறது.
சுதந்திர இந்தியாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களாக பல்வேறு சட்டங்கள் தேவைப்படும்போது அந்தந்த காலகட்டங்களில் சிலரது முயற்சியாலும் போராட்டத்தினாலும் இயற்றப்பட்டுள்ளன.
தேவதாசி முறை (ஒழிப்பு) சட்டம், வரதட்சணைத் தடைச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தை பாதுகாப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் என்று மிகச்சறந்த வார்த்தைகளோடு கருத்தமைந்த சட்டங்கள் இருந்தாலும்….
அவைகள் பெயரளவில் தான் இருக்கின்றன.அனைத்து தரப்பினராலும் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தில் இருக்கின்றன. இச்சட்டங்களினால் மட்டும் பெண் பாதுகாப்பு என்பது சாத்தியப்பட்டு விட முடியாது.
ஆண் பெண் என்ற இவ்விரு இனத்தவர்களும் மனதளவில் சரியான விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே குற்றங்களைத் தடுக்க முடியும்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் ஆண்களால் மட்டுமல்ல பெண்களே காரணங்களாக இருப்பதும் தான் பெருங்கொடுமை…!
தேவதாசி முறை (ஒழிப்பு), வரதட்சணை, குழந்தை திருமணம்,பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குடும்ப வன்முறைகள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் …. போன்ற அனைத்துவகை குற்றங்களும் பெண்களுக்கு மட்டுமே எதிரானது.
ஆனால் ஆண்களால் மட்டுமே இவை பெண்கள்மீது சாத்தப்படுகிறதா என்றால்…இல்லை. பெண்களும் ஆண்களுக்கு உடந்தைகளாக இருந்தே இத்தகைய கொடுமைகளை செயற்படுத்துகின்றனர் என்பன அன்றாட செய்திகளாக ஆங்காங்கே வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதனின் புரட்சி மனப்பான்மையும், மனித மூளையை எளிதாக சென்றடையும் ஊடகங்களும் தான் இத்தகைய அறியாமையை எடுத்துக் காட்டும் புரட்சி ஆயுதங்களாக உருபெற வேண்டும்.
கல்விக் கூடங்களும் குடும்பங்களும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி போதிப்பதைக் கடமையாகக் கொள்ள தொடங்கும் போதே பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுஞ்செயல் படிப்படியாகக் குறையும் என்பதை நம்பலாம்.
நாளைய சமூகம் பாலின சமத்துவத்தை முழுமையாக உணரும் சொர்க்கமாக மலரட்டும்!
_Dr.Jansipaulraj
Tirunelvely.India
9486624237.


