ஸ்ரீவைகுண்டம் அருகே இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்த ராஜா, தாதன்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி, திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த பிச்சைகண்ணு, திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்த முருகன் மற்றும் உவரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் ஆகியோர் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.
உடனே போலீசார் 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


