கருங்குளம் வட்டாரம், வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பட்டுவளர்ச்சி துறைக்கு மல்பெரி சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி சுற்றுலா நடந்தது.
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் அறிவுரையின்படி கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான வல்லக்குளம் கிராம விவசாயிகள், அரசு செயல்விளக்க பயிற்சி மையம், வி.எம்.சத்திரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இச்சுற்றுலாவில் ஸ்ரீவைகுண்டம் பட்டுவளர்ச்சிதுறை உதவி ஆய்வாளர் சங்கரேஸ்வரி தலைமையேற்று தலைமையுரை கூறினார். அரசு செயல்விளக்க பயிற்சி மைய இளநிலை ஆய்வாளர் டயானா மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்களான நிலம் தயாரித்தல், இரகங்கள், நீர் மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை மற்றும் பட்டுபுழு வளர்ப்பு, பராமரிப்பு முறைகள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.
மேலும் வல்லக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கமலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இச்சுற்றுலாவில் வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்த 50 விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர்கள் ராஜலெட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் மேற்கொண்டனர்.


