சாத்தான்குளம் அருகே மைனர் காதல் ஜோடி உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தை விஜய்(17) அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (16) இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வெளியூர் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையறிந்த மேகலாவின் பெற்றோர் நாசரேத் போலீசாரிடம் புகார் அளித்தனர். இருவரும் மைனர் என்பதால் இவ்வழக்கை திருச்செந்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி இருவருக்கும் திருமண வயது பூர்த்தி அடையவில்லை என கூறி இருவரையும் பிரித்து மேகலாவை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விஜய் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் விஜய் வெளியே வந்த நிலையில் நேற்று இரவு விஜயும், மேகலாவும் சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தாங்கரையில் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது இருவரும் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்ததையறிந்து நாசரேத் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மைனர் காதல் ஜோடி திருமண வயது பூர்த்தி ஆகாததால் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் பூச்சி மருந்து குடித்து இருவரும் ஒரே இடத்தில் உயிர் இழந்ததால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


