தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூய்மை இந்தியா இரு வார கால அனுசரிப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தல் போன்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே நாசரேத்தில் உள்ள கைத்தொழில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ்.ஜே.கென்னடி வரவேற்றார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவி மேலாளர் சிவக்குமார் முன்னிலை வைத்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளர் குருமூர்த்தி, மற்றும் நாசரேத் கைத்தொழில் பாடசாலை முதல்வர் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் 200 மரக்கன்று நடும் பணி நடந்தது. முன்னதாக நாசரேத் கைத்தொழில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் இயற்கையை காப்பதற்கும், தூய்மை பணியை மேற்கொள்ளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில துணைத்தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர் இம்மானுவேல் அருள்தம்பி மற்றும் கைத்தொழில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.


