மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர அனுமதி கடிதம் வழங்கக்கோரி கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசால் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பணி வழங்க கோரி பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்ற தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று மக்கள் நலப்பணியாளர்கள் 27 பேர் தங்களுக்கு அரசாணை பெற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வருகை தந்தனர். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும் வரவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக பேசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.


