தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாசரேத்தில் மின்பகிர்மான அலுவலகம் ஊரின் மேல்புறத்தில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான அலுவலகத்தின் மூலம் இந்த பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் ஐந்து பேர் பணி சுழற்சி முறையில் மின்பாதை ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் உள்ள காமாட்சிநகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி. இவர் நாசரேத் மின்பகிர்மான அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 7 மணி வரை பணிக்காக ஆனந்தபாண்டி பணியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மாற்றுப்பணிக்காக மற்றொரு ஆய்வாளர் பணிக்கு வந்துள்ளார். அப்போது அலுவலகத்தின் உள்ளே ஆனந்தபாண்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே அவர் நாசரேத் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆனந்தபாண்டி உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலிசார் தரப்பில் கூறும்போது,
ஆனந்தபாண்டி ஆறு மாதங்களுக்கு முன்னர் கோவில்பட்டியில் பணியாற்றி வந்ததும் அங்கிருந்து பணி மாறுதல் காரணமாக இங்கு அவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த அலுவலக பணியில் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மின் கணக்கீட்டை எடுப்பார்கள். அதேபோல் நேற்று இரவு 12 மணி வரை இவர் இந்த மின் கணக்கு எடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் கணக்கு எடுக்கவில்லை. இதனால் இந்த கொலை சம்பவம் இரவு 12 மணிக்கு மேல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொலையான ஆனந்தபாண்டி உடலில் தலை, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் வெட்டுக்காயம் உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட ஆனந்தபாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதில் இரவு நண்பர்களை அழைத்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதாவது முன் பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.
மின் பகிர்மான அலுவலகத்திலோ அதனை சுற்றியோ கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல் துறைக்கு சவாலாக உள்ளது என கூறப்படுகிறது.
இரவு அரசு அலுவலகத்தில் மின் வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


