சாத்தான்குளம் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்து குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி லட்சுமி (33). இவர்களுக்கு 8 வயது மகள் மற்றும் 4 வயது மகன் உள்ளனர். தற்போது இவர்கள் திருச்செந்தூர் அமராபுரம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 4 மாதமாக லட்சுமிக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உசரத்து குடியிருப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் லட்சுமி வசித்து வந்தார். கடந்த 20-ந்தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்றதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


