தோற்றத்தின் வரலாறு:
1890 களின் மத்தியில் மிஷனெரி ஊழியம் செய்ய வந்தவர்கள் தாமிரபரணி ஆற்றுக் கரையில் உள்ள கள்ளிக்காடு என்ற பகுதியில் சுவிசேஷம் அறிவித்தனர். அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்களையும் விவசாய நிலங்களையும் பராமரித்து நாடார் சமுதாய சில குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மத்தியில் தொடர்ந்து சுவிசே பணிகளை மிஷனெரிகள் செய்து வந்தனர்.
1890 நவம்பரில் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளம் வந்தது. அப்பகுதியில் குடியிருந்த அனைவரும் உயிர் பிழைக்க தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு கருங்குளம் கிராமத்தின் மேல் பகுதியில் உள்ள மேடான பரும்பு பகுதியில் தஞ்சம் அடைந்தனர். மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அந்நேரத்தில் மிஷனெரிகள் மக்களுக்கு உதவி செய்தனர். உணவு, மருத்துவம். உடை அடிப்படைத் தேவைகளை சந்தித்தனர். ஆற்றில் வெள்ளம் வற்றிய பின் மறுபடியும் கள்ளிக்காட்டிற்கு சென்று வாழ்விடங்களை சரி செய்து பனை ஏறுதலையும் விவசாயத்தையும் தொடர்ந்து செய்து வந்தனர். ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் மேடான பகுதிக்கு வருவதும் திரும்பி செல்வதுமாக பல வருடங்கள் வாழ்ந்து வந்தனர்.
1920 ல் கருங்குளம் மேடான பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்க முடிவு செய்து வரிசையாக குடிசைகளை கட்டி தில்லை நடராஜர் தெரு என்று வாழ ஆரம்பித்தனர். மிஷனெரி ஊழியர்களும் தொடர்ந்து ஊழியங்களை செய்து வந்தனர். ஒரு சில குடும்பங்கள் மிஷனெரிகளோடு நல் ஐக்கியத்தில் இருந்தனர்.
தாமிரபரணி ஆற்றின் அந்தக் கரையில் கொங்கராயகுறிச்சி என்ற ஊர் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்து நல்ல ஆலயத்தில் தேவனை ஆராதித்து வந்தார்கள். கொங்கராயகுறிச்சி சேகரமாக சில சபைகள் இணைந்து செயல்பட்டு வந்தது. 1922.ல் ஆழ்வார்கற்குளத்தில் ஒரு ஆலயம் கட்டி கொங்கராயகுறிச்சி சேகரத்தில் இணைத்து. இதை அறிந்த நமது விசுவாசிகளும் மிஷனெரிகளிடம் சொல்லி ஒரு சிறிய குடிசையை ஆலயமாக கட்டி சபையாக தேவனை ஆராதிக்க ஆரம்பித்தனர். சபையாரின் உற்சாகத்தைப் பார்த்த மிஷனெரிகள் கொங்கராயகுறிச்சி சேகரத்தோடு இணைத்துவிட்டனர். சபை வளர ஆரம்பித்தது.
அருட்பெருத்திரு G. T. செல்வின் 1945-1952
திருநெல்வேலி திருமண்டலத்தின் போரயராக இருந்த G.T. செல்வின் அவர்கள் சபையாரின் உற்சாகத்தைப் பார்த்து சிறிய குடிசையாக இருந்த ஆலயத்தை ஓடு போட்டதாக மாற்றி ஆலயத்திற்கு முன்பு உள்ள காலி இடங்களை இலவச வீட்டு மனைகளாக அரசாங்க உதவியுடன் கிறிஸ்தவர்களுக்கு கொடுத்து உற்சாகப்படுத்தினார். அவருடைய நினைவாக இந்த தெருவிற்கு செல்வின் தெரு எனப்பெயரிடப்பட்டது. பக்கத்தில் உள்ள தில்லைநடராஜர் தெருவும் காமராஜர் தெரு எனப் பெயர் மாற்றப்பட்டது. இரண்டு தெருக்களிலும் உள்ள சில குடும்பங்கள் கர்த்தரை ஆராதித்து வந்தனர். சபை வளர்ச்சி பெருகிற்று. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.


