நன்றி நெல்லை டைம்ஸ் நாளிதழ் மற்றும் பொறுப்பாசிரியர் திரு தம்பான் அவர்கள்.
கீழணைக் கட்டும் முன்பு கல்யாண தீர்த்தம் அருவி போலத்தான் கொட்டிக் கொண்டிருந்தது. அணை கட்டியதும், அருவியில் தண்ணீர் விழுவது குறைந்து விட்டது. கல்யாண தீர்த்த அருவி மிகப்பிரமாண்டமாக இருந்த காலத்தில் சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு. ஐயரும் அவர் மகள் சுபத்திராவும் கல்யாணதீர்த்தம் மேலே குளித்துக் கொண்டு இருந்த போது தவறி விழுந்து இறந்து விட்டார்கள். இந்த சம்பவம் சுதந்திர பேராட்ட வீரர்களுக்கு பேரிடியாக விழுந்தது. இவர்களின் நினைவிடமாக கல்யாணதீர்த்தம் மேல் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவர் 8.8.1957-ல் இந்த நினைவு மண்டபத்தினை திறந்து வைத்துள்ளார்.
இன்று தலைவர்கள் சிலையை ஊர் மத்தியிலும் பொதுமக்களுக்கு இடையூறாக வைப்பதால் ஏற்படும் பிரச்சினை, தமிழகத்தில் வரக்கூடாது என்று தான் இவரின் நினைவிடத்தினை நடுக்காட்டுக்குள் வைத்துவிட்டார் காமராஜர்.
பொதிகை மலை காணிகள் மிகச்சிறப்பானவர்கள். காணிகள் குடியிருப்பு தாமிரபரணி கரையில் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கரை பகுதியிலும் 48 அரை கிராமங்களாக உள்ளது. அங்கு காணி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் வாழும் கிராமங்களிலும் மருத்துவம் கை வந்த கலையாக உள்ளது. குறிப்பாக பாம்பு கடித்தலோ, காய்ச்சல், உள்பட பல நோய்களை தீர்க்கும் விஷ முறிவு மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கான மூலிகைகளை முறைப்படி பயன்படுத்தியும் வருகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலுமே நோய் தீர்க்க மருத்துவ மனையை தேடி வருவது கிடையாது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் நோய் தீர்க்க கூட அங்குள்ள மூலிகைகளை மிகச்சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். இயற்கையோடு ஓத்து வாழ்க்கிறார்கள். எப்போதாவது ஒரு முறைதான் தேவையென்றால் கீழே இறங்குகிறார்கள்.
காணிகள் காட்டை அதிகமாக நேசிப்பார்கள். காட்டு விலங்குகளை அன்போடு அரவணைப்பார்கள். விலங்குகளின் போக்கு கண்டு அதன் படி நடந்து கொள்வார்கள். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி சாய்க்க ஒரு நாளும் இடம் கொடுக்கமாட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தேன் எடுக்க அவர்கள் நடுக்காட்டுக்குள் செல்வார்கள். காட்டைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்களின் தற்காப்பு கலை எல்லாமே களரி அடிமுறை தான். எனவே இவர்களை களரியின் முன்னோடி என்றும் கூட சொல்லலாம். களரி அடிமுறை, மந்திரிகம், மருத்துவம் உள்பட களரி அடிப்படை முறைகளை மிகச்சிறப்பாக தங்களது வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் பாபநாசம் அணைக்கட்டுக்கு மேலே நடுக்காட்டுக்குள் இஞ்சுக்குழி என்ற இடத்தில் காணி இன மக்கள் வசிக்கிறார்கள்.
தாங்கள் வசிக்கும் இடத்தினை தெய்வமாக மதிப்பவர்கள். எவ்வளவு வசதி வாய்ப்பு வந்தும் கூட தங்களது வசதிக்காக தங்கள் வாழ்விடத்தினை மாற்றி கொள்ளாதவர்கள் காணி இனமக்கள். குறிப்பாக சொல்லப்போனால் தன்னிலையையும், பழமையையும் மறக்காதவர்கள்.
இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைத்து காட்டின் நடந்தும், படகில் அணையை கடந்தும் 14 கிலோமீட்டர் தூரம் திகில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இவர்கள் நினைத்தால் அரசிடம் பேசி மலை அடிவாரத்தில் ஒரிடத்தினை பெற்று அங்கே குடியமர்ந்து விடலாம். ஆனால் காட்டை நேசிக்கும் அவர்கள் காட்டை விட்டு கீழே இறங்க முயற்சிக்கவே இல்லை.
பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிக்குழி, சேர்வலாறு, அகத்தியர் காலனி, பெரிய மயிலார், சின்ன மயிலார் ஆகிய இடங்களில் காணி பழங்குடி மலைவாழ் மக்கள் பூர்வகுடிகளாக வசித்து வருகின்றனர்
இதில் இஞ்சி குழியில் வசிக்கும் காணி மக்களின் அன்றாட வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. பிற காணி நிலங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் வனத்துறை தொடர்பு வசதிகள் உள்ளன. ஆனால் இஞ்சிகுழி பகுதி காரையார் அணையை தாண்டி சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் நடுக்காட்டுக்குள் அமைந்துள்ளது.
ஆட்கள் நடமாட்டமும் எவ்வித தொலைதொடர்பு வசதியும் இல்லாமல் 100 ஆண்டுகளுக்குமேல் காணிகள் வசித்து வருகின்றனர். தற்போது இஞ்சிகுழியில் 7 குடும்பங்களை சேர்ந்த 24 காணிகள் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். படர்ந்து அடர்ந்த காடுகளைத் தாண்டி வன விலங்குகளின் ஆபத்தையும் மீறி 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து காரையார் அணையை அடையவேண்டும். பத்து கிலோமீட்டர் தூரத்தை விட காரையார் அணையை கடப்பது இம் மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்.
இஞ்சிகுழியில் வசிக்கும் வயதான முதியோருக்கு அரசு தரும் மாத ஓய்வூதியத்தை – தபால் காரர்தான் கொண்டு செல்வார். அவர் மாதந்தோறும் மிக கடினமான பயணத்தினை மேற்கொண்டு இஞ்சி குழியை அடைந்து அவர்களுக்கு பணத்தினை கொடுப்பார். இவர் நினைத்த மாத்திரத்தில் இஞ்சி குழியை சென்று விட முடியாது. தனியாக படகு பிடித்து தான் செல்லவேண்டும். மழை பெய்யதாலும், பனி அடித்தாலும் மாதம் தோறும் இந்த பணியை தபால் காரர் கண்டிப்பாக செய்யவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் டவுண் பஸ் போல படகு போக்குவரத்து உண்டு. ஆனால் வனத்துறை கட்டுப்பாடு காரணமாக நெல்லை மாட்டம் காரையாற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை ஓடிய படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. எனவே தற்போது படகு போக்குவரத்து இல்லை.
இருப்பினும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக இஞ்சிகுழி காணி மக்கள் மாதத்தில் இரண்டு முறை மிக சிரமப்பட்டு கீழே வந்து செல்கின்றனர். இதற்காக அந்த மக்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் கொண்ட காரையாறு அணை கடப்பதற்கு வனத்துறை சார்பில் படகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படகில் பயணம் செய்ய டீசல் வாங்க முடியாத சூழலில் உள்ளனர். படகில் செல்லாமல் அணையை சுற்றி கீழே செல்வதற்கு கூடுதலாக 10 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். எனவே மூங்கில் கம்புகளை கொண்டு தற்காலிக படகை கட்டி அணையில் மிதந்து வர படகு போல் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சிகள் உடன் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். முதலைகள் உள்ள இந்த அணையில் படகில் பயணம் செய்வது என்பதே மிக ஆபத்தானது தான். ஆனால் காணி மக்கள் தற்போது மூங்கில் கம்புகளால் ஆன தற்காலிக படகில் தங்கள் உயிரை பணயம் வைத்து, பழைய காலத்தினை போலவே துடுப்பு போட்டு கடந்து செல்கின்றனர்.
ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் மாதத்தில் ஆறு நாட்கள் செலவு செய்தாக வேண்டும் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் இவர்களுக்கு காரையாறு அணை அருகே உள்ள கடையில் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதற்காக வெள்ளிக்கிழமையே தங்கள் பயணத்தை தொடங்க வேண்டும் அன்று காலை நடக்க ஆரம்பித்தால் மாலை 3 மணி அளவில் அணையை வந்து சேர்வார்கள். பின்னர் அங்கிருந்து தங்கள் கட்டி வைத்துள்ள மூங்கில் படகினை எடுத்துக்கொண்டு சுமார் 2 மணி நேரம் அணையைக் கடந்து கீழே உள்ள சின்ன மயிருக்கு வந்துசேர்வார்கள். அங்கு தங்கள் உறவினர்கள் இல்லத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ரேஷன் பொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பிற பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அன்று இரவு மயிலாற்றில் தங்கிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் இல்லத்தை நோக்கி பயணத்தை தொடங்குவார்கள். ஆறு நாட்கள் காட்டில் திகில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மலை வாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் வெளியூர்களில் விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது
சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட காரையாறு அணையை கடப்பதற்கு வனத்துறை சார்பில் படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படகில் பயணம் செய்ய வனத்துறை காணி மக்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேசமயம் விவசாயத்தை தவிர வேறு வருமானம் இல்லாததால் காணிகள் டீசல் வாங்கி கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர். அணையை சுற்றி கீழே வர வேண்டும் என்றால் கூடுதலாக 10 கிலோ மீட்டர் அவர்கள் நடக்க வேண்டும் எனவே சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு டீசல் வாங்கி கொடுத்தாலும் கூட அவர்கள் நினைத்த நேரத்தில் வனத்துறையினர் படகில் ஏற்றி செல்வதில்லை. திடீரென அதிகாரிகள் யாராவது வந்தால் காணி மக்களை அம்போவென்று விட்டுவிட்டு அதிகாரிகளை படகில் ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கின்றனர். எனவே வனத்துறையை நம்பி பலன் அளிக்காததால் தற்போது காணி மக்கள் தன் கையே தனக்கு உதவி என்ற அடிப்படையில் சுயமாக மூங்கில் கம்புகளை கொண்டு தற்காலிக படகு கட்டி துடுப்பு போட்டு, பெண்கள் குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் வாழும் பகுதி புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி, ராஜநாகம் என்னும் நாகப்பாம்புகள் வாழும் பூமி. இதுபோன்ற பல்வேறு வன விலங்குகள். இவ்விடத்தில் இருந்து எல்லாம் தம்பிக்க இவர்கள் வழி வழியாக கற்று கொள்ளும் களரி அடிமுறை மட்டுமே காரணமாக கருதப்படுகிறது.
குறிப்பாக சொல்லப்போனால் இஞ்சுகுழி காணிகள் போல பேச்சிப்பாறை மலைப்பகுதியில் வாழும் காணிகள் கஷ்டப்படவில்லை என்றாலும் மிருகங்கள் அதிகமாக வாழும் பகுதி தான்.
பொதிகை மலை காணி இன மக்களை பற்றி மேலும் அறிவது அவசியமான ஒன்றாகும்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


