சாத்தான்குளத்தில் நள்ளிரவில் பறவைக்காவடி எடுத்துச் சென்ற வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜார் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திருச்செந்தூருக்கு பறவைக் காவடி எடுத்துச் சொல்லும் வாகனம் ஒன்று சாத்தான்குளம் மெயின் பஜார் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும் போது அங்கு உள்ள மின்கம்பத்தில் பறவை காவடி வாகனத்தின் கம்பி மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதனால் மின்கம்பம் பாதி உடைந்த நிலையில் தேங்கியது. மேலும் விபத்தின் காரணமாக மின் வயர்கள் மிகத் தாழ்வாக சென்றது.
பின்னர் அதிகாலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பறவைக்காவடி வாகனம் மின்கம்பத்தில் மோதி விட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


