தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயினை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்புடைய 21 கிலோ ஹெராயின் எனும் போதை பொருளை மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் அந்தோணி முத்து (42), ராஜேந்தர் மகன் பிரேம்சிங் (38), சவுகத்அலி மகன் கசாலி மரைக்காயர் (27) ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் மூவரையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.


