ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலிசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு படி செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) லட்சுமிபிரபா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே கிளாக்குளம் பெருமாள் கோவில் தெருவில் சந்தேகப்படும் முறையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து செய்துங்கநல்லூர் போலிசார் அங்கு வந்து 4 பேரையும் விசாரனை மேற்கொண்டனர். இதில் அந்த வழியாக வந்த ஒருவரை, 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து திருநெல்வேலி உடையார்பட்டியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா தாஸ் (எ) தாஸ் (23), திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த ஜெயராமன் (22), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிநாதன்(எ)ராஜ், மற்றும் ஆறுமுகம் ஆகிய நான்கு பேரையும் போலிசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட இசக்கி சுப்பையா தாஸ் ( எ) தாஸ் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், ஜங்ஷன் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும் என மொத்தம் 6 வழக்குகளும், ஜெயராமன் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஜங்ஷன் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும் என மொத்தம் 4 வழக்குகளும், இசக்கிநாதன் (எ) ராஜ் மீது தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


