38. வெட்டுப்பட்ட காலுடன் கொடைவிழாவில் ஆடி ஆசி வழங்கிய சாமியாடி
முன்கதை சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்த முத்துகிளி செல்போன் தொடர்பில் வீட்டுக்கு தெரியாமல் வயதான தம்பதியினருடன் மும்பை சென்று விடுகிறாள். அவளை நவீன போன் தொடர்பு வசதியுடன் கண்டு பிடிக்கிறான் நவீன். வயதான தம்பதிகளிடம் இருந்து முத்துகிளியை காப்பாற்றும் போது போலிசுக்கும் அவர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. போலிசில் மாட்டிக்கொண்ட தம்பதிகள் கொரோனா நோயில் இறந்து விடவே, உடன் இருந்த முத்துகிளி உள்பட தேடிச்சென்ற உறவினர்கள் கொரோனா முகாமில் வைக்கப்படுகிறார்கள். அதன் பின் போலிஸ் கமிஷனர் உதவியுடன் இரண்டு காரில் ஈபாஸ் மூலமாக தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. அதை பற்றி புரியாமல் தவித்தார் இளங்கோ. உண்மையை புரிந்து கொண்ட சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அவன் பூர்வீகம் தெரிந்தவர் தாமிரபரணி தாத்தா. இவன் அவரை பார்க்க சென்ற போது இறந்து விட்டார். தொடர்ந்து யாரிடம் இது பற்றி பேச என தெரியாமல் தவித்தான் சந்திரன். இதற்கிடையில் முத்துகிளி குடும்ப கோயில் கொடை விழா வருகிறது. அதில் குடும்பத்தினை தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது. அப்படி கலந்துகொண்டால் மறு கொடைக்கு அவர் உயிரோடு இருக்க மாட்டார்கள் என பலர் கூறியும் கேட்காமல் சந்திரன் அந்த கோயில் கொடையில் கலந்துகொண்டான். கொடை விழா ஆரம்பிக்கும் முன்பே பெரிய சாமியாடி காலில் அரிவாள் வெட்டு பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றான் சந்திரன். பெரிய சாமியாடி இல்லாமல் கொடை நடக்குமா? நடக்காதா? என எல்லோரும் தவித்து நின்றார்கள். இனி.
“இது போலீஸ் கேஸ் தான். நிச்சயம் மருத்துவம் பார்க்க முடியாது. ஒண்ணு போலீஸ் கம்ளய்ன்ட் பண்ணுங்க. இல்ல பெரிய ஆஸ்பத்திரி ஐகிரவுண்ட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்றான் வாட்சுமேன்.
அதை கேட்ட பண்டாரம், “முனியசாமி என்னை காப்பாத்துப்பா” என தலை மீது கை வைத்து உட்கார்ந்து விட்டார்.
“ஏடேய். வலி தாங்க முடியலைடே. ரத்தம் வேறே வடியுது. கண்ணை கட்டிட்டி கிட்டு வருது. ஏதாவது செய்யுங்கடே” என கண்ணை மூடி அழ ஆரம்பித்து விட்டார்.
“சேய். ஒரு பெரிய மனுசன் இப்படி குழந்தை போல அழுகிறாரே. அப்படியென்றால் இவருக்கு வேதனை எப்படியிருக்கும்”.
மனதுக்குள் வேதனையாக இருந்தது.
சந்திரன் வாட்சுமேனிடம் கூறினான். “வாட்சுமேன் அய்யா தப்பா நினைக்காதீய. நான் டாக்டர் கிட்ட பேசுதேன். நிச்சயம் அவிய எங்களுக்கு உதவி செய்வாவ”.
“எப்படி செய்வாவிய. அந்த மனுசன் வட நாட்டு காரன். தமிழே தெரியாது. உங்க கிட்ட பேச போறானாக்கும்”.
சந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.
“வடநாட்டு காரரா. வாட்சுமேன் அய்யா. என்னை மட்டும கொஞ்சம் உள்ள வுடுங்க நான் பேசி பாக்கிறேன்”.
வாட்சுமேன் அவனை பார்த்தார்.
“உனக்கு இந்தி தெரியுமா?”
“தெரியும். நான் பேசி பாக்கிறேன்”.
வாட்சுமேன் மனது வைத்தார். “போய் பாரு”.
“என்ன எளவை இழுத்துட்டு வாருவானுவளோ. சண்டை போட்டு நொறுங்கி வெட்டிட்டு நம்ம கிட்ட வந்து விழுறானுவ”. என முனுமுனுத்த படியே சந்திரனை பார்த்தார்.
“இந்தி கார டாக்டர் . நீங்க சொன்னா எங்க கேட்கபோறாரு”.
என நினைத்தப்படி கேட்டை திறந்தான் வாட்ச்சுமேன்.
பண்டார நாடாரை தூக்கி, தோளில் சுமந்த படியே இருவர் வர உள்ளே ஓடினான் சந்திரன்.
“ஜி. மெர்க்கு இந்தி மாலும்” என டாக்டரிடம் பேச ஆரம்பித்தான் சந்திரன்.
டாக்டர் புன்சிரிப்புடன் அவனிடம் பேசினார்.
இருவரும் நிறைய இந்தியில் பேசினார்கள்.
வாட்சுமேனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இரண்டு பேரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“டாக்டர் சாப். டாக்டர்” என இந்தியில் சரளமாக சந்திரன் பேசிய பேச்சை கேட்டுக்கொண்டே இருந்தார்.
டாக்டர் எழுந்தார்.
சந்திரனை பார்த்து, “தம்பி நான் டிரிட்மெண்ட செய்றேன். ஆனால் நரம்பில் வெட்டு பட்டிருந்தால் என்னால் எதுவுமே செய்ய இயலாது. பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்” என்றார்.
சந்திரன் அதிர்ந்து நின்றான்.
******
கோயிலில் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
கோயில் கொடை நடக்குமா? நடக்கதா? பேசாமல் வீட்டுக்கு போய் விடுவோமா? என ஒவ்வொருவர் சிந்தனையும் ஒவ்வொரு மாதிரியாக மாறிக்கொண்டே இருந்தது.
அதே நேரம் ஒருவருக்கு ஒருவர் ஓசைப்படாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
” இதுவரைக்கும் நம்ம கோயில இப்படி நடக்கல. என்ன ஆச்சோ ஏதோ ஆச்சோ. இப்படி ஆகுது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என ஒருத்தி பேசினாள்.
இதையெல்லாம் புரிந்துகொண்ட ரத்னம் கூட்டத்தினரை பார்த்து பேசினார்.
“யய்யா யாரும் அவசர படாதீய. எல்லாம் நல்லா நடக்கும். நம்ம முனியாண்டி சாமி எல்லாத்தையும் காப்பாத்துவாவ”
“எங்க நடக்கும். எப்படி நடக்கும் . காலில வெட்டுபட்டவரு. துடிதுடியா துடிச்சிட்டு போயிருக்காரு. அருவாள் பாளையருவா. நல்ல வீச்சருவா. ஓங்கி வெட்டியிருக்காரு. கால் துண்டா போகவேண்டியது எப்படியோ தப்பியிருக்கு. ஆனா நரம்பு கட் ஆயிருக்கும். அப்படியிருக்கும் போது அவர் எப்படி உடனே வர. இங்க வந்து அவிய எங்க சாமி யாட கொடை எப்படி முடிய. விளங்கிபோவும்”
ஒவ்வொருவர் மனதிலும் இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ரத்னத்தினை யாரும் எதிர்த்து பேச முடியவில்லை.
“அடுத்த குடும்பத்து காரனுவ உள்ள நுழைஞ்சா நம்ம சாமிக்கு பிடிக்காது. தெரிஞ்சும் அய்யா அந்த பம்பாய் காரன உள்ள கூட்டிட்டு வந்தாவ. அதான் சாமி அறிகுறி காட்டுது”. பாலகிருஷ்ணனிடம் ராமசாமி கிசுகிசுத்தார்.
“விடும்வே. நம்ம நேரம் தான் எங்க போனாலும் தொங்கிட்டு நிக்கே. போன வருசம் கொரோனா வந்துச்சு கோயில் கொடையை ஜோலி முடிச்சிட்டு. இந்த வருசம் என்ன செய்யன்னே தெரியலையே. வளர்த்த கிடா மாடு மாறி நிக்கு. சாமிக்கு பலிகொடுத்து வந்த சொந்த பந்தத்துக்கு விருந்து படைக்கலாமுன்னு நெனைச்சேன் . கடைசியில இப்படி ஆகி போச்சே”
“ஏய் சும்மா இருங்கடே. தொன தொனன்னு பேசிக்கிட்டு. இங்க எதுவும் சரியில்லை”.
“என்னடே சரியில்லை”.
“பொன்னு புள்ளைய சரியில்லைடே. அதான் பிரச்சனை”.
“எந்த பொன்னு பிள்ளை சரியில்லை. நீ என்னத்தை பாத்த”.
“அதான் நாட்டாண்மை இருக்காவியளே. அவிய மக கதை. ஊரு புறாவும் நாறி போய் கிடக்கே”
முத்துகிளிக்கு யாரோ சாட்டையால் அடிப்பது போல இருந்தது.
அவளை அறியாமலே கண்ணீல் இருந்து கண்ணீர் கொட்டியது.
“ஏடே வார்த்தையை அளந்து பேசு. நம்ம முனியாண்டி புண்ணியம் தான் . இன்னைக்கு அவ தப்பி நம்ம ஊருக்கு வந்திருக்கா. முனிய சாமியை நல்லா விழுந்து விழுந்து கும்பிடுற பிள்ளை அதான் தப்பிச்சிருக்கா. அவளை போய் பேசாத ஆமாம்” பாலகிருஷ்ணன் கடுமையாக பேசினார்.
ரத்னம் அமைதியாக இருந்தார்.
பொன்னு நாடார் கிட்டே வந்தார்.
“என்ன பெருசு. பேசும். யோவ் சுடலை சாமியாடி, பெரிய சாமியாடிக்கு நரம்பு கட்டாயிட்டாரு. கொடை நடக்குமா நடக்காதான்னு நீர் சொல்லும்வே. வாயை முடிக்கிட்டு கம்முன்னு கிடக்கீறு”.
“அவர் என்னைத்தை சொல்லுவாருடே. அவருக்கு சாமி வரணுமுல்லா. வந்தா ஆடி சொல்ல மட்டாராக்கும்”.
முத்துகிளிக்கு அழுகை அதிகமானது. எழுந்தாள். காணிக்கை மஞ்சள் பையை அப்பாவிடம் கொடுத்தாள். அப்பா கையை பிடித்து இழுத்தாள். “வாங்க அப்பா. நீங்க கோயிலுக்கு செஞ்சது போதும். கணக்கை முடிச்சிட்டு போவும். என்னால நீங்க ஊர் மக்க முன்னால தலைகுனிய வேண்டாம்”.
விரக்தியாக சிரித்தார் ரத்னம்.
“யம்மா. முனியாண்டி இருக்காரும்மா. அதான் நாம எவ்வளவு பெரிய பிரச்சனையில இருந்து தப்பினோம். இப்பவும் அவரு இருக்காருமா.? நிச்சயம் சாமி யாட பண்டாரம் வருவான். கோயில் கொடை நடக்கும்”.
எல்லோரும் அமைதியானார்கள்.
மீண்டும் மஞ்சள் பையுடன் போய் அமர்ந்தாள் முத்துகிளி. தனது செல்போனை எடுத்தாள். யாருடன் பேசக்கூடாது என்று நினைத்தாளோ அந்த சந்திரன் எண்ணை தேடினாள்.
*****
டாக்டர் சாமியாடியை உள்ளே கொண்டு வரச்சொன்னார்.
இரண்டு பேரும் தோளில் சுமந்தபடியே பண்டாரத்தினை உள்ளே கூட்டி வந்தார்கள்.
அருகில் உள்ள படுக்கையில் அவரை கிடத்தினார்கள். வலி போக்குவதற்காக அவருக்கு ஊசியை போட்டார் டாக்டர். அதுவரை வில்லங்கமாய் பேசின வாட்ச்சுமேன் , இரண்டு நர்ஸ் ஆகியோர் டாக்டருக்கு உதவியாக அருகில் வந்தனர். கால் இரண்டாய் பிளந்து இருந்தது. டாக்டர் நன்றாக சோதனை செய்தார். நல்லவேளை நரம்பு எதுவும் ஆக வில்லை. ஆனால் காலில் உள்ள சதையை மூட 13 தையல் போட்டார் டாக்டர்.
வலி தாங்க முடியாமல் தவித்தார் பண்டாரம்.
மேலும் அவருக்கு வலி தாங்கும் ஊசியும், புண் ஆறுவதற்கு ஊசியும் போட்டார்.
பண்டாரத்துக்கு தூக்கம் வந்தது. அப்படியே சரிந்தபடி தூங்க ஆரம்பித்தார்.
வாட்ச்சுமேனை பண்டாரம் அருகில் நிறுத்திவிட்டு டாக்டர் சந்திரனுடன் வெளியே வந்தார்.
அதன் பின் தன் அறைக்குள் சென்று அமர்ந்தார்.
டாக்டர் சந்திரனிடம் இந்தியில் கூறினார். நாம் தமிழில் என்ன கூறினார் என பேசுவோம்.
“சந்திரன். இவருக்கு 13 தையல் போட்டு இருக்கு. அவருக்கு வலியை குறைக்கவும் நன்றாக தூங்கவும் ஊசி போட்டிருக்கிறேன். அதிகாலை வரை எழுந்திருக்க முடியாது. அதோடு மட்டுமல்லாமல் இவர் குறைஞ்சது 10 நாள்கள் ரெஸ்ட இருக்கணும். காலை ஆட்ட கூடாது அசைய வைக்க கூடாது . இல்லாட்டி காலையே வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும்” என்றார்.
“பரவாயில்லை டாக்டர் பத்திரமா பாத்துகிறோம். எங்களுக்கு செஞ்ச உதவிக்கு மிக்க நன்றி டாக்டர்” என கையெடுத்து கும்பிட்டான் சந்திரன்.
அந்த சமயத்தில் சந்திரனுக்கு முத்துகிளியிடம் இருந்து போன் வந்தது.
முத்துகிளி பேசுகிறாள். சந்தோஷமாக இருந்தது. போனை எடுத்தான். அவள் அழுது கொண்டே பேசினாள். “சாமியாடி எப்படி இருக்காவிய. இங்க எல்லாரும் எங்க அய்யாவை தாறுமாறா பேசுதாவ. கொடை நடக்குமா நடக்காதான்னு கேட்காவிய. என்ன ஆச்சி”
தேம்பி தேம்பி அழுதாள்.
என்ன பதில் சொல்வான் சந்திரன். “சாமியாடி தூங்குறாரு. காலையில தான் விழிப்பாருன்னு” எப்படி சொல்லுவான்.
மௌனமாக இருந்தான் சந்திரன்.
“என்ன பேசமாட்டுக்கீய”. முத்துகிளி பெரிதாய் அழ ஆரம்பித்தாள்.
*****
கோயில் கொடைவிழாவில் அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்தனர்.
“இங்க பாருடே புஷ்பம். முத்துகிளி என்ன லட்சணத்தில பொறந்தாளோ. மும்பையில போயி சீரழிஞ்சுட்டு வந்துட்டா. இங்க கோயில் கொடை தந்தினித்தோம் போடுது”
பொட்டலா பாட்டி சத்தமாவே பேசினாள்.
“ஏய் பொட்டலா சும்மா கிடக்க மாட்டே . ரத்னத்துக்கு தெரிஞ்சா வருத்தப்படுவான்”.
“அவன் ஏன் வருத்தப்படனும். உள்ளதை தானே சொல்லுதேன். இதுக்கு நான் ஏன் பயப்படணும்”.
“உனக்கு அறிவு இருக்கா பொட்லா .அமைதியா இரு”.
“நான் வெளியே சொல்லிப்புட்டேன். ஆனா அத்தனை பேரும் இதை சொல்ல முடியாம மனசுக்குள்ள வைச்சிகிட்டு வெந்து சாவுதாவ”.
ரத்னம் காதில் பொட்டலா பேச்சு விழுந்தது.
அவருக்கு யாரோ முதுகில் சவுககால் அடிப்பது போல் தெரிந்தது.
எழுந்தார்.
“பொட்டலா அக்கா இங்க பாரு. என் புள்ளையை கொறை சொல்லாத. நான் நொந்து போய் இருக்கேன்” என்றார்.
அனைவரும் கப் சிப் என்றானார்கள்.
முத்துகிளி மஞ்சள் பையை மார்ப்போடு அணைத்துக்கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
“நீ. ஏன் அழுவுத முத்துகிளி. அழாத தைரியமா இரு. நீ. உத்தமி. நம்ம வீட்டில எந்த பொம்பளையும் வேசியில்லை. எங்க அம்மையும் அப்படித்தான். உங்க அம்மையும் அப்படித்தான். என் வீட்டு பொண்ணுங்கள பேச எவளுக்கு அருகதை கிடையாது.நீ. ஏன் அழுவுத”
ரத்னம் துண்டை உதறியபடி பேசினார்.
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
நேராக முனியாண்டி பூடத்துக்கு முன் வந்தார்.
“சாமியாடிகளா முனியாண்டிசாமியாடிதான் அருவாளை எடுத்து வெட்டிக்கிட்டான். மத்த சாமியாடிகளுக்கு என்னாச்சு. என்னை பிடிச்சு காட்டுதியளோ. 21 பூடம் இருக்கு. முனியம்மா, சுடலை,பேச்சி எல்லாம் எங்க போனீய. நீங்க துடியான சாமியாடியா இருந்தா வாங்க. வந்து கொடையை நடத்துங்க. கொடையை ஏத்துக்காங்க”
எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்.
“அப்படியா நீங்க சாமி ஆட மாட்டியளோ. என்ன சத்தம் காட்டாம இருக்கீய. பதில் சொல்லிதியளா. இல்லையா?”
“பெரிய சாமியாடி இல்லாம” என இழுத்தார் மற்றொரு சாமியாடி சீனி.
அப்போது கணியான் எழுந்து வந்தார்.
“யய்யா கணியான் சாமிகளா. நீங்க தானே சாமியாடிகளோட சேர்ந்து எல்லா காரியமும் செய்வீயளே. ஆளு ஆளுக்கு கேள்வி கேட்காவுலே ஏதாவது செய்யுங்க”.
எல்லோரும் அடித்து வைத்த இரும்பு போலவே அசையாமல் இருந்தார்கள். மீண்டும் மௌனம். ஆடி மாத காத்து மட்டும் ஒரு சுழற்று சுழற்றி வீசி விட்டு அதுவும் சென்று விட்டது.
பண்டாரம் மனைவி எழுந்தாள். சாமி பீடத்துக்கு முன்னாள் வந்து விழுந்தாள், “ஆஸ்பத்திரிக்கு போனவிய எப்படி இருக்காவளோ. எனக்கு முந்தி பிச்சை போடு சாமி. என் புருசனை முள்ளு முறிவு இல்லாம கொண்டு வா சாமி”
என அழ ஆரம்பித்து விட்டார்.
முத்துகிளி ஒருபுறம் சிணுங்க. அந்த இருட்டுக்குள் பல விசும்பல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தார்.
ரத்னம் வெகுண்டு எழுந்தார்.
“ஏய் முனியசாமி. உனக்கு நான் வருசம் வருசம் கொடை கொடுத்துகிட்டே இருக்கேன் பாரு. நீ என்ன சோதிக்க. மத்தவிய முன்னால என்னையும் , என் பிள்ளையையும் தலை குனிய வைக்க. இந்த கொடை மட்டும் நடக்கல நான் என் வீட்டோட வேதத்துக்கு போயிருவேன்”. விரக்தியில் பேசினார் ரத்னம்.
அக்காள் சொர்ணகிளி வந்தாள். “அய்யா கோவப்டாதீய்யா. பொது இடம் நாலும் இருக்கும். எவுயளும் என்னத்தையும் சொல்லிட்டு போறாவ. கொல்லையில போறவிய. நீ. தைரியமா இருய்யா”
கனியான் முத்துராமலிங்கம் வந்தார்.
“யய்யா கலங்காதுங்கய்யா. சாமியை நம்பிட்டியளியா. ஒரு குறவும் வராது. கொடை நடக்குமுய்யா” . ரத்னம் தோளை தட்டிவிட்டு, கூட்டத்தினை பார்த்தார். “யய்யா மாரே இருங்க. நாங்க சாமிபுள்ளிய. சாமியை வருத்துறோம். ஆடாத சாமியையே நாங்க ஈசன் அருளாள ஆட வச்சவிய. எப்படியும் கொடை நடக்கும். ஏடே வாங்கடே. வந்து மகுடம் வாசிங்கடே” முத்துராமலிங்கம் குரல் உச்சத்தில் ஒலித்தது.
மகுடகலைஞர்கள் வந்தனர்.
மகுடத்தினை அடிக்க, பெண்வேடம் கட்டிய இரண்டு பேர் முனியாண்டி பீடம் முன்பு ஆட ஆரம்பித்தனர்.
கணியான் முத்துராமலிங்கம் உச்சானி குரலில் பாட ஆரம்பித்தார்
“ஆதி பொன் வெள்ளி கைலாசத்தில்,
அரனாரும் பார்வதியும்
இன்னும் யார் யாரெல்லாம் வீற்றிருக்கிறார்கள் என்றால்”
இந்த குரல் பூலோகத்தினை விட்டு மேலாகத்திற்கும் கேட்டு இருக்கும் போல, அண்டமே அதிர்ந்தது. சாமியாடிகளுக்கு மட்டுமல்ல, சாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் உடலும் சிலுசிலுத்தது.
ஆனால் யாருக்கு கேட்க வேண்டுமோ அந்த பெரிய சாமியாடி டாக்டர் போட்ட ஊசியில் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.
பொதுவாக காவல் தேவதை கோவில் கொடைவிழாவில் சாமி ஆடுகிறவர்கள் அருகே யாரும் போகமாட்டார்கள். கண்ணில் ஆங்காரக் கோபத்துடன், கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு ஈட்டி, சூலாயுதம், வேல்கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களில் ஒன்றை வைத்து பயமுறுத்தும் உறுமல் சத்தத்துடன் சாமி ஆடுவார்கள். இவர்களிடம் கிட்டே போக பயப்படுவார்கள்.
வேண்டுதல் ஏதாவது கேட்பவர்கள் தான் சாமியாடியின் அருகே பயபக்தியோடு சென்று தங்கள் குறைகளைக் கூறி அருள்வாக்கு கேட்பார்கள். சாமியாட்டம் முடிந்ததும் விபூதி பூசிக்கொள்ள பக்தர்கள் அனைவரும் சந்தோஷமாக திரும்புவார்கள்.
கணியான்கள் தான் அங்கி அணிந்த தீப்பந்தத்துடன் ஆக்ரோஷமாக சுடலைமாடசாமி ஆடுகிறவர்களின் அருகில் சென்று சாமியாடியின் கையைப் பிடித்து ஆடக்கூடியவர்கள். இதற்கு காரணம் புராண ரீதியில் சம்பந்தபட்டதாக இருக்கிறது.
ஏற்கனவே பாலகிருஷ்ணன் சொன்ன கதையில் இருந்து கணியான் பாடும் இந்த வரலாறு சற்று மறுபட்டதாகவே இருந்தது. ஆனாலும் ஏற்புடையதாக இருந்தது.
கணியான் வரலாற்றை முத்துராமலிங்கம் பாட ஆரம்பித்தார்.
சுடலைமாட சாமியின் பிள்ளைகளாக கணியான்கள் கருதப்படுகிறார்கள்.
எனவே தான் சாமி வரவில்லையென்றாலும் உரிமையாக ஆடி சாமியை வர வைக்கிறோம்.
நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்ட ஒரு அவதாரம் தான், சுடலைமாடசாமி. சிவபெருமானின் சுடரில் இருந்து அவதரித்தவர். சுடலைமாடசாமி மயான வேட்டைக்கு செல்லக்கூடியவர். எனவே, கைலாயத்தில் இருந்து உடனே பூலோகத்திற்கு அனுப்பிவிட நினைத்தார்கள்.
தான் பூலோகம் செல்லவேண்டுமானால் கைலாயத்தில் வடக்கு வாசலில் பூஜை நடத்த வேண்டும் என்றும், எட்டா பீடம் போட்டு ஆள் உயர மாலை அணிவித்து படையல் படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அப்படிபட்ட சுடலைமாட சுவாமிக்கு சேவகம் செய்வதற்காக எங்களைப் போன்ற கணியான்கள் படைக்கப்பட்டதாக கூறுவார்கள். உலகெங்கும் சுடலைமாட சாமியின் பெருமைகளை மக்களிடம் கூத்து நடத்தி எடுத்துக்கூறுவது தான் கணியான்களின் வேலை. இதனால் தான் சுடலைமாடசாமி கோவில் விழாவில் கணியான் கூத்து முதலாவதாக இடம் பெறுகிறது. என பாடிய படியே, இடையில் சாமயாடிகளுக்கு ஆதாழி வர ஆதாழி பாடலும் பாடினார்.
சிலருக்கு முத்துராமலிங்கம் கணியான் முயற்சி கேலியாக இருந்தாலும் ரத்னம் நம்பிக்கையுடன் இருந்தார். முத்துகிளி கையை பிடித்தார்.
“முத்துகிளி தாயி. ஆழாத. நம்ம சாமி. முனிய சாமி . நம்மள மானப்பட விடமாட்டாரு. கொடை நடக்கும்” என நம்பிக்கையுடன் பேசினார்.
*****
அந்த நம்பிக்கை வீண் போக வில்லை.
கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில்..
தீடீரென்று பண்டாரம் கண்விழித்தார்.
வாட்சுமேன் தடுத்தார். அவரை தட்டி விட்டு யார் துணையும் இல்லாமல் நடந்து, அவ்விடத்தினை விட்டு வெளியே வந்தார். டாக்டரை கை எடுத்து குப்பிட்டார்.
“டாக்டரையா ரொம்ப நன்றி. எனக்கு நிறைய வேலையிருக்கு நான் வாரேன்”
டாக்டர் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
அதன் பின் ஆஸ்பத்திரியை விட்டு கீழே இறங்கினார்.
“முனியாண்டியப்பா நீ. தான் என்னை காப்பாத்தனும்”.
நடந்தார்.
அவர் மனதுக்குள் தைரியம் வந்தது.
வாட்சுமேன் திகைத்தார். “13 தையல் போட்டவரா இப்படி நடக்கிறார்”.
“அய்யா. சந்திரா இங்கன வா. நீ என் இடது கை பக்கம் நின்னுக்க. சாமி வலது கை பக்கம் நிப்பாவ. கொடை நின்னு போயிட கூடாது . உடனே நாம கோயிலுக்கு போவும்”. என நடந்தார்.
சந்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வெற்றி நடையாய் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
****
கோயில் கொடைவிழாவில் மிகவும் ஆகரோஷமாய் கணியான் முத்துராமலிங்கம் பாடிக்கொண்டே இருந்தார்.
வருடம் தோறும் முத்துராமலிங்கத்துக்குதான் வாய்ப்பு தருவார் ரத்னம்.
எனவே கோயில் கொடை விழா இடையில் நின்று விடக்கூடாது.அவரை தலை குனிய வைத்து விடக்கூடாது என அவர் கவனமாக இருந்தார்.
எனவே அவருக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டி இங்கே இருக்கும் சாமியாடிகளை ஆட முயற்சி செய்தார்.
அவர் முயற்சியும் முனியசாமி அருளும், புது தெம்புடன் பெரிய சாமியாடி காரில் ஏறி கருங்குளத்தில் இருந்து இங்கே வருகிறார் என்பது யாருக்கும் அப்போது தெரியாது.
கனியன் முத்துராமலிங்கம், கனியான் வரலாற்றை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
சிவன் பிரம்மஹத்தி தோஷத்தால் பித்தம் கொண்டவனைப் போலாகி சுடலை என்னும் பெயர் கொண்டு சுடுகாட்டில் தாண்டவத்தைத் தொடங்கினார். சிவனின் ருத்ர தாண்டவத்தால் ஈரேழு பதினான்கு லோகமும் ஆட்டம் கண்டது. தேவர்களோ சிவபெருமானின் ஆட்டத்தை நிறுத்த வேண்டி ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிட்டனர். சிவன் தாண்டவமாடும் இடம் வந்த நாராயணன் தனது சகோதரியான பார்வதி தேவியை உடன் ஆடுமாறு சொன்னார். இருவரும் சேர்ந்து ஆடும் போது இருவரின் கால்களில் உள்ள இரண்டு சலங்கை மணிகள் அறுந்து விழுந்து பாறையில் மோதியது. விழுந்த இரண்டு சலங்கை மண்ணில் விழுந்தது. அந்தச் சலங்கை இரண்டும் இரண்டு குழந்தைகளாக உருவாகின. குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த நாராயணன் நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளை வெட்டி சிவனுக்கு ரத்தம் தெளித்து ருத்ரதாண்டவத்தை நிறுத்துங்கள். அதற்கு பதில் உங்களுக்குத் தேவ அமிர்தம் தருகிறேன் என்று கூறினார்.
உடனடியாக சிறுவர்கள் தனது இடது கையை கீறி பெருமானை நோக்கி ரத்தவாடை காட்டினார்கள். இந்த வாடை கண்ட சிவபெருமான் தனது கையில் ஒட்டியிருந்த பிரம்ம தேவனின் சிரசை கீழே விட்டார். தலை சுக்கு நூறாகி போனது. ஈசனுக்குப் பிரம்மஹத்திதோசம் விலகியது. சுடர்களத்தில் சிவன் ஆடியதால் சுடலை எனப் பெயர் பெற்றது. உடன் பேயை போல பராசக்தி ஆடியதால் அவள் பேச்சி எனவும் பெயர் பெற்றார். கால் சிலம்பு மணியில் இருந்து தோன்றியதாலும் அந்தக் குழந்தைகள் கணியான் என்று பெயர் பெற்றனர்.
கணியான் என பெயர் பெற்ற சிறுவர்களைத் தேவ கன்னியர்களின் பொறுப்பில் வளர்ப்பதற்காக விடப்பட்டனர். தேவ கன்னியர்கள் ஆட்டம் பாட்டம் எனத் தேவர்களைக் குஷிப்படுத்தியதால் இவர்கள் இன்றும் கணியான் கூத்துக் கலைகளில் பெண் வேடமிட்டு ஆடுகின்றனர். ஒரு சமயம் மகிஷாசூரனை வதம் செய்த மாகாளி அவதாரம் எடுத்தார் பராசக்தி. அவர் மகிஷா சூரனை வதம் செய்த பின்பு கோபத்தில் இருந்தாள். இதனால் ஈரேழு பதினான்கு லோகமும் ஸ்தம்பித்தது. அப்போது ஆங்கார ரூபினியாக பைத்தியம் பிடித்தவள் போல ஆடினாள். அவளைச் சமாதான படுத்த தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், ரிஷிகள், அனைவரும் வந்து சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். அப்போது அங்கு வந்த கணியான் குழந்தைகள் பெண் வேடமிட்டு ஆடினர். அவர்களின் ஆட்டத்தைக் கண்டதும் சாந்தமடைந்தாள் மகாளி. ஆகவேதான் கணியான்கள் பெண் வேடமிட்டு ஆடுகிறார்கள் என மற்றொரு வரலாறு கூறுகிறது. பார்வதி தேவியையே சாந்தப்படுத்திய கணியான்கள், இன்றைக்கு இந்த கோயில் கொடைவிழாவை நடத்தாமல் போவாரா என்ன?
மாகாளியைச் சமாதானப்படுத்தியதால் அவர்களுக்கு மகிஷாசூரனின் தோலை வைத்து கருவி செய்து கொள்ளுங்கள் என்றாள் அன்னை. மகிஷாசூரன் எருமை தலை உடையவன். மகிஷாசூரனின் தோலில் செய்த கருவி என்பதால் அது மகுடம் என்று பெயர் பெற்றது.
ஒரு காலகட்டத்தில் கணியான் சகோதரர்களால் மேலோகத்தில் இருக்க முடியவில்லை. ஆகவே பூலோகத்தில் சிவனின் புகழைப் பரப்ப அனுப்பி வைக்கப்பட்டார்கள். சிவனின் புகழை பாடிய அவர்கள், பூலோகத்தில் ஜாதகம் கணித்தல், மாந்தீரிகம் ஆகிய தொழிலைச் செய்து வந்தார்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் முகாமிட்ட சுடலையை பாட வந்தவர்களே கணியான்கள். எனவே அவர்களது பூர்வீகம் தாமிரபரணி கரையே . இந்த நதிக்கரையில் பிறந்த நாங்கள் மக்களை சந்தோஷப்படுத்தி , கோயில் கொடையில சாமியை சந்தோசப்படுத்தி வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
நான் சொல்றது எல்லாம் உண்மையா இருந்தா முனியசாமி, இந்த கோயில் கொடையில ஒவ்வொரு சாமியா ஆடனும். மக்களுக்கு ஆசி கூறனும். நாங்க மனம் மகிழ்ச்சியா வீடு போய் சேரணும்.
எங்க கையை அறுத்து நாங்க உனக்கு படைக்கோம். சாமி. அது நடக்கணுமுன்னா இப்போ கோயில் கொடை நடந்தே ஆகணும்.
கணியான் தீவிரமான ஆட்டம்.
அந்த ஆட்டத்திற்கிடையில் சாமியாடிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதாழி வர ஆரம்பித்தது.
முதலில் தாய் பேச்சி தான் ஆட ஆரம்பித்தாள். தொடர்ந்து. “உய்” என்ற கத்தலுடன் சுடலை சாமி ஆட ஆரம்பித்தார். “யப்பா. கொடை நடக்குப்பா. வருவான் முனியாண்டி வருவான்”.
அனைவர் முகத்தில் சந்தோஷம் வந்தது.
அந்த நேரத்தில் தான் மேற்கில் இருந்து கார் வரும் லைட் ஒளி தெரிந்தது. சிறு புள்ளியாக தெரிந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி கோயில் அருகில் வந்து நின்றது.
அது சந்திரனின் கார்.
அனைவரும் காரை நோக்கி ஓடினர்.
உள்ளே தெளிந்த முகத்தில் இருந்த பெரியசாமியாடி பண்டார நாடாரை பார்த்தனர்.
“நான் நல்லா இருக்கேம்ப்பா. கதவை திறந்து விடு. என் இடத்துக்கு போனும் . மக்களுக்கு நல்லது சொல்லனும்” என்றார் பெரியசாமியாடி.
காரை கோயிலுக்குள் கொண்டு வந்தான் சந்திரன்.
அனைவரும் வழி விட்டனர்.
“ஏய்”. என கூச்சலுடன் கிளம்பினார் பண்டாரம்
கார் நிற்கும் முன்பே கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தார்.
பந்தலுக்குள் வந்தவர். அங்கி குல்லாவை எடுத்து மாட்டினார்.
“ஏய் சந்தனத்தை கொண்டா” என சத்தம் கொடுத்தார்.
முருகேசன் சந்தன கும்பாவோடு ஓடி வந்தான். சந்தனத்தை அவர் மார்பிலும் கைகளிலும் முதுகிலும் பூசினான்.
இதற்குள் காரை ஓரமாக விட்டு விட்டு பந்தலுக்குள் ஓடி வந்தான் சந்திரன்.
“அய்யோ 13 தையல் போட்டவரே”. என பயத்துடன் ஓடி வந்தார். அவரது இடது கரத்தினை பிடித்து தன் தோளில் போட்டுக்கொண்டான்.
“தொடர்ந்து யப்பா கிடா படையல் வையுங்கப்பா” என்றார்.
மள மள வென்று கிடாக்களை கொண்டு வந்தனர். பல கொடைவிழாவில் கிடாக்கள் தண்ணீர் ஊற்றி உதறுவதற்கு மணிக்கணக்கில் ஆகும். ஆனால் இந்த கோயில் கொடையில் தண்ணீரை தலையில் விட்ட உடனே கிடாய் உதறியது. எனவே பத்தே நிமிடங்களில் கிடாய் படையல் தயாராகி விட்டது.
அடுத்த நிமிடம் “பூஜை வையி. தீபாதரணை காட்டு. வேட்டைக்கு போகனும்” என்று கர்ஜித்தார்.
பூ பண்டாரம் ஓடி வந்து பூஜை செய்தார். பல்வேறு தீபத்தினை காட்டி விட்டு, கலர் கலராக சாம்பிராணியை வாழை தண்டில் வைத்து சுவாமி பீடத்தில் காட்டினார்.
அந்த கலரில் முனிய சாமி பீடம் மினுங்கியது.
வேட்டைக்கு போய் வாங்க என சுவாமி உத்தரவு கொடுப்பது போல் இருந்தது.
வேல் கம்பை எடுத்தார்.
அடிடா மேளத்தை என்றவுடன், கணியான் ஆதாழி கீதம் பாட நையாண்டி மேளம் அடிக்க. அந்த இடமே அமர்களமானது.
புளியங்குளம் செந்தூர் பட்டாசு வான வேடிக்கை ஆரம்பமானது.
கருத்து நின்ற வானத்தில் கலர் கலராய் பட்டாசு வெடித்தது.
மற்ற சாமிகளும் அங்கி குல்லாவை எடுத்து மாட்டினார்கள். அருணாசலம் தீபந்தத்தை எடுத்து வந்து எல்லா சாமியாடி கையிலும் கொடுத்தார்.
அனைத்து சாமியாடிகளும் வேல்கம்பையும் தீ பந்தத்தையும் எடுத்து கொள்ள, எல்லா சுவாமிகளும் வேட்டைக்கு சென்றனர். பெரியசாமியாடி சந்திரனை பார்த்து, “நீ. இங்க நின்னுப்பா எனக்கு முனியாண்டி துணையிருக்கான். நான் வேட்டைக்கு போயிட்டு வாரேன்” என வேகமான வேல்கம்பை தூக்கி கொண்டு பாய்ந்தார்.
கணியான்கள் மகுடம் அடித்துக்கொண்டு பின்செல்ல. கைவெட்டி திரளை கொடுக்கும் கணியானும் பின்னால் சென்றார்.
சாமியாடி சுடுகாட்டுக்குள் சென்றார்கள்.
கூம் இருட்டு. அங்கே என்ன நடக்கிறது என்றே சரியாக தெரியவில்லை. ஆனால் கணியான் சத்தம் மட்டும் கேட்டது.
அரிவோம் அச்சா
ஆகாய வானில் பரசு வாணி
சுடலையாடி
மக்கள் பிணி தீர
எங்கள் பிணி தீர
வடகந்த வாசலுக்கும்
காத்திருந்த ரத்தமும் சோறும்
இந்தா… பிடி… இந்தா பிடி
இது தான் திரளை போடும் போது கணியான் கூத்து கலைஞர்கள் பாடும் பாட்டு கேட்டது. இந்த சமயத்தில் கணியான் கூத்துக் கலைஞர் கையிலும், நாக்கிலும் வெட்டி ரத்தத்தினை சோற்றில் விட்டு, அதை பிணைந்து நான்கு திசைக்கும் வீசுவார்கள். அந்தச்சோறு கீழே விழாது. அதை மேலே இருந்து தேவதைகள் பிடித்துக்கொள்ளும். இதுதான் கணியான்களுக்கு இறைவன் கொடுத்த பெரிய வரப்பிரசாதம்.
பெரும்பாலுமே திரளை கொடுப்பவர்கள் ஒருவாரம் விரதம் இருப்பார்கள். அப்போது மாமிசம் சாப்பிடமாட்டார்கள். பெண் உறவு கூடாது. அவர்கள் கையில் கத்தியால் வெட்டி கீறுவார்கள். கத்தியில் திருநீறுதான் பூசியிருப்பார்கள். அப்போது ரத்தம் கசியும். அதைச் சோற்றுடன் புரட்டுவார்கள். சில கிராமத்தில் வாழைபழம் நனையும் அளவுக்கு ரத்தம் ஊற்ற வேண்டும். அதையும் கணியான் தொழிலாளிகள் செய்வார்கள். ஆனால் அந்தத் திரளை முடிந்தவுடன் அந்த கீறல் அப்படியே மறைந்து விடும். இது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும்.
அது போலவே தான் இங்கு திரளை கொடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. நான்கு வாசலுக்கும் கணியான் தேவதைகளை பார்த்து மேலே சொன்னது போன்றே சொன்னான். சாமியாடிகள் “இந்தா பிடி” என சொல்லும் போது அலறல் சத்தத்துடன் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
பந்தலுக்குள் எல்லோரும் சாமியாடிகள் சென்ற இடத்தினை பார்த்தபடியே நின்றனர்.
சந்திரன் மெதுவாக திரும்பி கூட்டத்தினை பார்க்கிறாள். அங்கே சிவந்த விழியுடன் முத்துகிளி அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். என்னவோ தெரியவில்லை. அவளுக்கு வேட்டைக்கு செல்லும் சுவாமியை பார்க்க எண்ணமில்லை.
சிறிது நேரத்தில் சாமி தீப்பந்தத்துடன் திரும்பினார்கள்.
கோயில் பந்தலுக்குள் நுழைந்தவுடன் முருகன் குழுவினரின் நையாண்டி மேளம் வாசிக்க ஆரம்பித்தனர்.
நையாண்டி மேளத்தில் ஆக்குரோஷமாய் சுவாமிகள் ஆட ஆரம்பித்தனர்.
ஒரு சாமி படையல் செய்த கிடாயில் இருந்து ரத்தம் சாப்பிட்டது. சாமி ரத்தம் சாப்பிடவசதியாக பழங்களை போட்டு வைத்திருந்தார்கள். சாமிகள் பந்தத்தினை வைத்து சுற்று சுற்று என்று சுற்றி வந்தார்கள்.
பந்தத்தில் சுடர்கள் மார்பிலும் முதுகிலும் பட்டாலும் கூட சாமியாடிகளுக்கு எதுவும் ஆக வில்லை.
ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ரத்னம் வந்தார், “யப்பா கொடையை ஏத்துக்கிட்டியளா இல்லையா?” என கேட்டார்.
உடனே மேளம் நிறுத்தப்பட்டது.
பெரிய சாமியாடி ” ஏத்துக்கிட்டப்பா. ரொம்ப திருப்திப்பா. அடி மேளத்தை ” என கூறி விட்டு ஆட ஆரம்பித்தார்.
அதன் பின் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்க ஆரம்பித்தார்.
சந்திரனுக்கு “நீ. எனக்கு இடது கையா இருந்துக்க. சாமி எனக்கு வலது கையா இருப்பாரு” என பண்டாரநாடார் சொன்னது நினைவு வந்தது.” எனவே அவன் ஓடிபோய் அவர் இடது கையை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டான்.
அனைவருக்கு வரம் கொடுத்தார் பெரிய சாமியாடி.
சந்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “13 தையல் போட்ட வரா இவரு. இந்த ஆட்டம் ஆடுறாரு. உண்மையிலே முனியாண்டி சாமிக்கு மிகப்பெரிய சக்தி இருக்கு”.
ஒவ்வொரையும் கூப்பிட்டார். அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பூ மாலையையும் தேங்காய் பழத்தினையும் கொடுத்தார். அதன் பின் நெற்றியில் விபூதியை வைத்து, “நான் பார்த்துகிறேன். நல்லா இருப்ப. அடுத்த வருசம் இதை விட நல்லா வருவ” என கூறினார்.
முத்துகிளியை கூப்பிட்டார், “பயப்படதப்பா. அடுத்த வரும் போது உனக்கு கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை உன்னை தேடி வருவான். கவலைபடாதே” என ஆசி வழங்கினார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் . மற்ற சாமியாடிகள் எல்லாம் ஆடி அசந்து உட்கார்ந்தும் கூட பெரிய சாமியாடி விடவில்லை. படப்புல இருந்த கள்ளு பதனீரை எடுத்து கணியானிடம் கொடுத்தார். மது புட்டிகளை எல்லாம் பிரியர்களிடம் பங்கு வைத்து கொடுத்தார். அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்கிய பிறகுதான் அமர்ந்து இளநீர் குடித்தார்.
சந்திரன் அவரத வெட்டுப்பட்ட காலை பார்த்தான். “ஒரு வேளை ரத்தம் பொங்கியிருக்குமோ” . பொங்க வில்லை. “காலை வரை தூங்குவார் . தூக்க ஊசி போட்டு இருக்கேன் என சொன்னாரே டாக்டர். ஆனால் இங்கு என்ன நடக்குது. கோயில் கொடைவிழா குறைவு படாமல் நடக்க எழும்பி வந்து விட்டாரே சாமி. இது 21 வது நூற்றாண்டு தானா. இப்படியும் நடக்குமா?”. எதுவுமே புரியாமல் விழித்தான் சந்திரன்.
பெரிய சாமி சொன்னார். “என்ன சந்திரா. எனக்கு இடது கரத்தில உனக்கு இடம் தந்திருக்கேன். உனக்கு என்னடா இந்த கோயில் கொடையில முக்கியத்துவம். அடுத்த குடும்பத்து காரன் உள்ளே வரக்கூடாதுன்னு சொன்னவியளுக்கு சொல்லுதேன். சந்திரன் என் குடும்பத்து காரம்ப்பா. அவன் அடுத்த வருசத்தில இருந்து வரி கொடுப்பான். அவனுக்கு இந்த கோயில் மேலே இருக்க உரிமையை காட்டத்தாண்டா இந்த விளையாட்டு” என்று கூறிவிட்டு திருநீறை எடுத்து அவனுக்கு பூசி தேங்காய் பழத்தினை கொடுத்து பூவையும் கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டு பந்தலை விட்டு வெளியே வந்தான். இதை யாரிடம் கொடுப்பான். எல்லோரும் ஆசி வாங்கி விட்டு வரும் போது, அவர்களின் தாயோ அல்லது தாரமோ வந்து பிரசாதத்தினை வாங்கி கொள்வார்கள். இப்போது என் கையில் பிரசாதம். எங்கு கொண்டு செல்வான்.யாரிடம் கொடுப்பான். தனக்கு தெரிந்து முத்து கிளியிடம் தான் கொடுக்கவேண்டும். முத்துகிளியிடம் தனக்கு கிடைத்த ஆசியை கொடுத்தால் வாங்கி கொள்ளுவாளா? அவள் வாங்கி கொண்டால் சுவாமி எங்களை இணைக்கத்தான் இந்த திருவி¬ளாடல் ஆடி யிருக்கிறார் என ஒத்துக்கொள்ளலாம்.
எங்கே முத்து கிளி.
முத்துகிளியை தேடினான்.
ஆனால் அவள்-?
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


