சுஜாதா (டிசம்பர் 10, 1952 – ஏப்ரல் 6, 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா அவர்களின் இயற்பெயர் விஜயலட்சுமி இவர் 1952 டிசம்பர் 10ல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை சங்கரன் மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். அங்கு தனது குடும்பத்தினருடன் குடியேறிய சுஜாதா சிறிது காலம் தையல் வேலை செய்து வந்தார், 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
`போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி’ என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
`வரலாறு’ படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் ஏப்ரல் 6, 2011 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்.[


