ஆங்கிலேயர்களால் திருநெல்வேலி மாவட்டம் 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாளில் அமைக்கப்பட்டது. அன்றைய நாளை (செப் 1) நெல்லை தினமாக கடந்த ஆண்டு முதல் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. நெல்லை தினத்திற்கான பிரத்யேக லோகோ வடிவமைக்கப்பட்டு கொரோனா காலமாக இருந்ததால் இணைய வழியில் கொண்டாடப் பட்டது.
இந்த ஆண்டு அரசு அருங்காட்சியகம் திருநெல்வேலியுடன் இணைந்து சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கம் நெல்லை தினத்தை விமர்சயாக கொண்டாட முடிவு செய்தது.
அதன் படி, இன்று மாலை 6 மணிக்கு அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளி கலையரங்கத்தில் வைத்து விழா சிறப்பாக நடந்தேறியது.
விழாவிற்கு திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாளர். சத்தியவள்ளி முன்னிலை வகித்து உரையாற்றினார். விழாவில்
வரலாற்றில் நெல்லை என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. அதில் எழுத்தாளரும், மாவட்ட கலை அமைப்பின் துணைச் செயலாளருமான நாறும்பூநாதன் பங்கேற்று நெல்லைச் சீமையின் வரலாற்று நிகழ்வுகளைக் கண் முன் காட்டுவது போல் விளக்கினார். குளோரிந்தா சர்ச், ரேனியஸ் ஐயர், கோபாலசுவாமி வரலாறு, பாளையங்கோட்டையின் கோட்டை வரலாறு என ஊரின் ஒவ்வொரு மூலையைப் பற்றிய வரலாறுகளை சுவை பட எடுத்துரைத்தார்.
அடுத்ததாக பேசிய எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான முத்தாலாங்குறிச்சி காமராசு அவர்கள் பொதிகை மலை அனுபவங்கள், பேக்லாண்டு, மடப்பைய போன்ற வட்டார வழக்கு சொற்களின் உண்மை வரலாறுகள், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார். முடிவில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு இணைய வழியில் நடத்தப் படும் நெல்லை டாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களான முனைவர். கட்டளை கைலாசம், எழுத்தாளர். எம். எம். தீன், அக்சஸ் ஆனந்த், ஹரி பிரதான், அஜித் சாய் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் நினைவுப் பரிசை வழங்கினார்.
நிகழ்ச்சியை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர். சைமன் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் பொறியாளர் சங்கர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.


