கயத்தாறு தாலுகா ராஜாபுதுக்குடி அருகே உள்ள பராக்கிரமபாண்டியன் குளம் என்கிற இந்திர குலம் வடக்குப் பகுதியில் சோலார் நிறுவனம் மின் கட்டுமான பணிகளுக்காக நிலத்தை தோண்டும்போது பழங்கால பொருட்கள், மண்பானைகள், மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள், பெருமளவில் கிடைத்தன. இதனால் அப்பகுதியில் தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என அருமை ராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து இதுகுறித்து தொல்லியல் துறையினர் பத்து வாரங்களுக்குள் ஆய்வு செய்து பதில் அளிக்குமாறு கூறினர். தொல்லியல் துறையினரும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் பராக்கிரமபாண்டியன் குளத்தில் அருகில் உள்ள ஆற்றில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது தடுப்பணை கட்டப்படுவதால் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு பாதிப்பு வருமா? என்பது பற்றி தெரிந்து கொள்ள பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் நேற்று தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைதம்பி பராக்கிரம பாண்டியன் குளம் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார்.


