செய்துங்கநல்லூர் அருகே மேலசிரியந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு தல ஆய்வு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோயிலில் மூன்று கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான ஆய்வு திருநெல்வேலி வரலாற்று பண்பாட்ட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் தலைமையில் இரண்டு கட்ட பணி ஆய்வு செய்தனர். இதில் வரலாற்று ஆய்வாளர்கள் கோமதி சங்கர், நந்தினி, சிவசண்முகம், பிரியதர்ஷினி, அனுஷா ஜெயராமன் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ரெமென்ட் பிரட்ரிக் மூன்றாம் கட்ட ஆய்வினை கோவிலில் தொடங்கினார். கோயில் கல்வெட்டில் முதல் கல்வெட்டு பாண்டிய மன்னன் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கல்வெட்டாகும். இந்த கல்வெட்டானது இவரது மூன்று ஆண்டு ஆட்சி செய்தபோது பொறிக்கப்பட்ட கல்வெட்டு. இந்த மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இளவரசனாக இருந்தவர் அப்போது இந்த கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இவரது கல்வெட்டு ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கல்வெட்டுகளில் அரசனுடைய புகழ் முதல் வரியிலும் கல்வெட்டு எழுதியவர் பெயர் கடைசிவரியிலும் இடம்பெறும். ஆனால் இந்த கோயிலில் உள்ள இரண்டாவது கல்வெட்டு எழுதியவர்கள் பெயர் பத்துக்கும் மேற்பட்டு காணப்படுகிறது. அந்த கல்வெட்டு விக்கிரம கோபாலவைவன் குருகுலத்தரையன் என்பவரால் எழுதப்பட்டு கல்வெட்டு எழுதும் 10க்கும் அதிகமானோர் தங்கள் பெயரை கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர். இதனை கையெழுத்து கல்வெட்டு என்பர். இன்னும் சொல்வதானால் ஆட்டோகிராப் கல்வெட்டு எனவும் சொல்லலாம். இதேபோல மூன்றாவது கல்வெட்டு கோயில் கருவறையை ஒட்டி வலதுபுறத்தில் இருக்கிறது இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறவர்மன் சீவலப்பன் என்று மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. இதில் தற்போது உள்ள ஊர் பெயர் மேலசிரியந்தூரானது கோவிலில் எழுதப்பட்ட கல்வெட்டில் திருவழுதிநாட்டு தென் திருவழுதி நாடு பாண்டிய நாட்டு சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் பள்ளிக்கூடத்து பள்ளிபீடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகத்திற்கு சம்பந்தப்பட்ட மாறவர்மன் சீவல்லபன் நேரடியாக கோவிலின் முன் கல் இருக்கையில் அமர்ந்து தானதர்மங்கள் வழங்கியதை குறிப்பிடுகிறது. நான்காவது கல்வெட்டு பூதலமடந்தை எனும் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகரன் முதலாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது. இதே மன்னனின் ஐந்தாவது கல்வெட்டின் தொடர்ச்சி மெய்கீர்த்தியாக இருக்கிறது முற்று பெறவில்லை. 6வது கல்வெட்டு புகழ் பெற்ற மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டாகும். இது அவனது ஆறாம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டதாகும். இம்மன்னன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வெற்றி கொண்டு நாட்டை திரும்பவும் மன்னன் மூன்றாம் ராஜராஜனிடம் ஒப்படைத்த சிறப்புக்கு உரிய மன்னன். இக்கல்வெட்டுகளில் பாண்டியநாட்டின் வளநாடான அமிதகுணவளநாட்டு பராக்கிரம கோடநல்லூர் மெல்வகை நாட்டொரு நாட்டு சிவசெந்தில் பூர்வ ஈஸ்வரமுடையார் என இக்கோவிலின் பெயராக கல்வெட்டுகுறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வு திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு தல ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்த போது 1100ஆம் ஆண்டில் இருந்து இந்த கல்வெட்டு இருப்பதால் கோவில் 900 ஆண்டுகள் பழமையான கோவில் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வு பணிகளை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கோகுலம் அகடமியை சேர்ந்த 11 மாணவ மாணவியர்கள் கல்வெட்டு எழுத்துக்களை ஆய்வாளர்களிடமும் ஆசிரியர் முருகசெல்வி ஆகியோர்கள் துணையுடன் கல்வெட்டு எழுத்துக்களை வாசித்து பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பிரமுகர்கள் சுப்பிரமணி சரவணன் மற்றும் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ரெமென்ட் பிரட்ரிக், தலைவர் சுபரீத் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
சிதிலமடைந்து காணப்படும் பழமையான இந்த சிவன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் செல்லமுடியாத அடர்ந்த முட்புதரில் கோவில் இடத்தில் மறைந்து கிடந்த கோயில் சில ஆண்டுகளுக்கு முன் சிவனடியார்கள் அந்த கோயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டனர். தற்போது கோவிலில் பூஜை நடந்து வருகிறது. பழமையான இந்த சிவன் கோயிலை புதுப்பித்து மூன்று காலமும் பூஜைகள் நடைபெற வேண்டும். இதுபோன்ற வரலாறு கல்வெட்டுகளான பாண்டிய மன்னர்களுடைய வரலாறு சுவடுகள் அழியாதவறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


