மருதூர் அணையில் அடர்ந்து கிடக்கும் அமலை செடியை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுததுள்ளனர்.
தாமிரபரணி நதியில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் கீழக்கால் மற்றும் மேலக்கால் மூலமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. கார், பிசானம், முன்கார் போன்ற மூன்று போகம் விளையும் இடம். மேலும் இந்த அணைக்கட்டு கி.பி. 1500 ம் ஆண்டும் ரூ 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. தாமிரபரணியில் கட்டப்பட்ட தடுப்பு அணையில் மிகவும் நீளமான அணைகட்டு இதுதான். 4067 அடி நீளம் கொண்டது. இந்த அணைக்கட்டில் தேங்கும் அமலை மற்றும் மணலை அப்புறப்படுத்த 12 மணல் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை முறையாக பயன்படுத்தாக காரத்தினால் அமலை செடிகளை அகற்ற முடியவில்லை. அந்த அமலை செடிகள் மருதூர் கீழக்கால் மற்றும் மேலக்காலில் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் ஓட்டம் குறைந்து உள்ளது. எனவே இந்த அமலை செடியை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னல்பட்டியை சேர்ந்த விவசாயி, அ.ம.மு.க கழக தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் மருதுவிநாயகம் கூறும் போது, சுமார் 520 ஆண்டுகளுக்கு முன்பு கட்ட பட்ட பிரமாண்டமான அணைக்கட்டு இது. இந்த அணைக்கட்டு மூலமா நேரடி மற்றும் குளத்து பாசனம் வழியாக விவசாயம் நடைபெறுகிறது. மேலக்கால் வழியாக சாத்தான் குளம் புத்தன் தருவை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கீழக்கால் வழியாக, சிவகளை ,பெருங்குளம் உள்பட பல குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் பிரமாண்டமான இந்த அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உள்ள அமலை செடியை அகற்ற நடடிக்கை எடுக்கப்படவில்லை. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தேங்கும் அமலை செடியை அகற்ற ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் நடவடிக்கை எடுத்து, அமலை செடியை அகற்றியுள்ளார். அதுபோலவே மருதூர் அணையில் தேங்கும் அமலை செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் கூறினார்.
அமலை செடிகளில் மிக அதிகமான தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இந்த அமலை செடி மூலமாக தாமிரபரணியில் அதிக தண்ணீரை நீராவியாக வெளியேற்றி கொண்டிருக்கிறது. எனவே தண்ணீரை சேமிக்க அமலை செடியை அகற்றுவது மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


