தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அங்கன்வாடி ஆசிரியைகளுக்கு கொரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் பரவிடாமல் தடுத்திட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதேநேரத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் தடுத்திட அரசின் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் ஆசிரியர்கள், ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தவரிசையில், வல்லநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியைகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். முகாமில், சித்த மருத்துவர் செல்வக்குமார் ‘கொரோனா வைரஸ் தொற்றும்-, சித்த மருத்துவமும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகளும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதற்கான வழிமுறைகள், உணவு வகைகள், குடிநீர் வகைகள், மருந்துகள் மற்றும் கையாள வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பயிற்சியில் பங்கேற்ற அங்கன்வாடி ஆசிரியைகள் அனைவருக்கும் ‘கோவிட்- 19ம் -சித்த மருத்துவமும்’ என்ற விளக்க கையேடு வழங்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவர் செல்வக்குமார் தலைமையில் மருந்தாளுனர் வெங்கடேசன் குழுவினர் செய்திருந்தனர்.


