தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கலியாவூர், மணக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிகளவு மணல்கள் கடத்தபடுவதாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கலியாவூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் டிப்பர் லாரியில் ஜேசிபி வைத்து மணலை அள்ளிக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் பிடிபட்டார். 4 பேர் தப்பியோடினர்.
அவரை பிடித்து 5 லாரிகள், ஒரு மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரம், 3 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து முறப்பநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குபதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பாண்டி மகன் சிதம்பரம் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கலியாவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன்கள் தங்கராஜ் (வயது 32), கமல்ராஜ் (வயது 25), பெருமாள் (வயது 21), கரைசேரியைச் சேர்ந்த பழனி ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்