தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு குறித்த முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் கடந்த மே மாதம் 25 ந்தேதி அகழாய்வு துவங்கியது. ஆதிச்சநல்லூரில் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், மற்றும் தொல்லியல் துறை லோகநாதன் ஆகியோர் தலைமையிலும், சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தலைமையிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வை துணை இயக்குனர் சிவானந்தம் துவக்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்விடங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் உள்ள இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. சிவகளையில் முதுமக்கள் தாழிக்குள் இருக்கும் எலும்புகளை ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைகழகத்தினை சேர்ந்த டாக்டர் பிச்சப்பன் தலைமையில் குழுவினர் வந்தனர். பொருள்களை பத்திரமாக எடுத்து பாதுகாத்து வருகின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு மிகசிறப்பாக நடைபெறும் என அகழாய்வு துறையினர் அறிவித்துள்ளனர். அதுபோலவே தற்போது தங்குதடையின்றி பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் அகழ்வாய்வு பணி குறித்த முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இதுவரை போடப்பட்ட குழிகள் மற்றும் கிடைத்த பொருள்கள் குறித்து தகவல்களை குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுவரை ஆதிச்சநல்லூரில் 26 குழிகள் தோண்டப்பட்டு உள்ளதாகவும், இதில் 22 முதுமக்கள் தாழிகளும், 438 தொல் பொருட்களும், 111 கரிமங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சிவகளை அகழாய்வு பணியில் 11 குழிகள் அமைக்கப்பட்டு அதில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 61 தொல்பொருள்கள் மற்றும் 23 கரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரில் தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாய்வு பணியில் நுண்கற்கால கருவிகள், தமிழ் பிராமி என்று கூறப்படும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், இரும்பிலான ஆன தொல் பொருள்களும், மேற்கூரை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவகளை அகழ்வாய்வு பணியில் காசுகள், கல்லாலான பந்து மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். தொல்லியல் துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் உள்பட முககிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த அறிக்கையில் இதுவரை கிடைத்த பொருள்கள் படங்களையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, ஆதிச்சநல்லூரில் இந்தியாவில் முதல் முதலாக 144 வருடங்களுக்கு அகழாய்வு நடந்து உள்ளது. ஒவ்வொரு தடவையும் ஆய்வு நடைபெறும் போது அது குறித்து தகவலை சேகரிப்பது மிக அரிதாக இருக்கும். ஆதிச்சநல்லூர் வரலாற்றில் முதல் முதலாக மே 25 ந்தேதி அகழாய்வு தொடங்கி நான்கு மாதத்தில் முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 ஒன்றை வெளியிட்டு இருகிறார்கள். இது மிகவும் வரவேற்க தக்கது. கீழடியில் 23 மொழிகளில் அகழாய்வு அறிக்கை தந்தது போல ஆதிச்சநல்லூர் சிவகளை அறிக்கையை விரைவில் தமிழக அரசு தரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அதே வேளையில் மத்திய தொல்லியல் துறை 2004 ல் நடந்த அகழாய்வின் அறிக்கையை மதுரை உயர் நீதி மன்றத்தில் ஒப்படைத்தாக கூறிவருகிறார்கள். அந்த அறிக்கையை உடனடியாக தமிழக தொல்லியல் துறை தலையிட்டு வெளியிடவேண்டும் என்றார்.
2004 அகழாய்வு அறிக்கையில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்பே அமெரிக்கா புளோரிடா ஆய்வு மையத்துக்கு முதுமக்கள்தாழி அனுப்ப பட்டது. ஆய்வு 6 மாதம் நடைபெறும் என்றார்கள் ஆனால் 1மாதத்தில் அதன் வயது கண்டு பிடிக்கப்பட்டு கி-.மு. 900 என நிர்ணயக்கப்பட்டது. சிவகளையில் முதுமக்கள் தாழிக்குள் உள்ள பொருளை ஆய்வு செய்ய வந்த மதுரை காமராஜர் பல்கலைகழக டீம் 2 வருடம் கழித்து தான் அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார்கள். தற்போது இந்தியாவில் உள்ள தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அமெரிக்காவை போலவே இங்கேயும் தொல்லியல் ஆய்வு செய்ய நிறைய வாயப்புள்ளது. ஆனால் இரண்டு வருடம் என்பது மிக அதிகமான காலம். எனவே வெகு சீக்கிரமாக ஆய்வு அறிக்கையை வெளியிட அதிகாரிகள் ஒத்துழைகக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
&&


