பத்திரிகையாளர் சரவணன், “நெல்லை தினவிழா ராணி அண்ணா கல்லூரியில் நடத்தவுள்ளோம். நீங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 1-ஆம் தேதிதான் நெல்லை தினவிழா.
ஏற்கெனவே 2020-ஆம் ஆண்டு சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் சைமன் அவர்களும், பொதுச்செயலாளர் சங்கர்மணி அவர்களும் ஏற்பாடு செய்து, நெல்லை அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவசக்திவள்ளி அம்மாவுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் நானும் நாறும்பூநாதனும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். அந்த நினைவுதான் இப்போது எனக்கு வந்தது.
இதே நிகழ்ச்சியை இதே நாளில் சென்னையில் வைத்து, தாமிரபரணிக்காகப் போராடும் நெல்லை மண்ணின் மைந்தர்களை அழைத்து அவர்களைக் கௌரவிப்போம் என நாங்களும் திட்டமிட்டிருந்தோம். ஆகவே, நான் “இந்த நிகழ்ச்சிக்கு வர இயலாது” என மறுத்துவிட்டேன்.
ஆனால், காலம் வேறு மாதிரியாக வேலை செய்தது. ஆம்! “தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்துப் பின்னொரு நாளில் இந்த நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம்” என சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தினர் கூறிவிட்டார்கள். இப்போது ‘நெல்லை லைப்’ தலைமை ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார் பேசினார். “அய்யா, ராணி அண்ணா கல்லூரியில் நெல்லை தினவிழா நடக்கிறது, வர இயலுமா?” என்றார். இப்போது என்னால் முடியாது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதை மறுக்க இயலுமா? உடனே சம்மதித்துவிட்டேன்.
இதற்கிடையில், அய்யா பட்டிமன்றப் பேச்சாளர் புத்தனேரி செல்லப்பா அவர்களும் என்னுடன் அந்த மேடையில் பேச உள்ளார். அது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. நாங்கள் காலையில் முனைவர் மணிமொழிச்செல்வன் மற்றும் செல்லப்பா அய்யாவோடு கல்லூரிக்குச் சென்றோம்.
எங்களை அன்போடு வரவேற்றார்கள் கணேசமூர்த்தி அவர்களும் சரவணன் அவர்களும். அவர்களோடு எச்.ஆர்.டி. (HRD) துறையின் தலைவர் முனைவர் ராம்குமாரும் இணைந்து கொண்டார். அனைவரும் முதல்வர் அறைக்குச் சென்றோம். முதல்வர் என்னைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார்; ஆதிச்சநல்லூர் பற்றி நிறையப் பேச வேண்டும் என்றார். தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து, என்னையும் செல்லப்பா அய்யாவையும் கௌரவித்துவிட்டு, பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பேராசிரியர்களை வழியனுப்ப அவர் சென்றுவிட்டார்.
அதன்பின் பேச்சு தொடர்ந்தது. நானும் அய்யாவும் நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினோம். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாணவிகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தோம்.
எங்களோடு பொருநை ரோட்டரி சங்கத்தின் தலைவரும் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த மேகலிங்கம் அய்யா, தலைவர் அய்யா உட்பட பலர் வருகை தந்து பெருமை சேர்த்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் துறையைச் சேர்ந்த அனைத்துப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
மாணவிகளிடம் பேசிய இந்த காலம் பொன்னான காலம். சுமார் 200 மாணவிகள் இருந்தார்கள். அதில் 100 மாணவிகளாவது எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து, நெல்லையின் பெருமையையும் தாமிரபரணியின் பெருமையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், அதுவே எங்களுக்குப் பெருமை அளிப்பதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், புத்தனேரி அய்யா கூறிய புதுப்புதுத் தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன. அய்யா, நீங்கள் ஒரு தகவல் பெட்டகம்! உங்களிடமிருந்து நாங்கள் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு தந்த கல்லூரி முதல்வருக்கும், நெல்லை லைப் கணேஷ்குமார் அவர்களுக்கும், பத்திரிகையாளர் சரவணன் அவர்களுக்கும், துறைத்தலைவர் முனைவர் ராம்குமார் உட்பட அனைத்துப் பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் என் நன்றிகள்.
– முத்தாலங்குறிச்சி காமராசு


