தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஓய்வு பெற்ற சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர்கள் ஃ சாராள் தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கம் இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் விழா – காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி , வரவேற்புரை ஆற்றினார்கள். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் முன்னிலை வகித்தார்கள்.
சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏழை காசநோயாளிகளுக்கு புத்தாடையை துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் வழங்கி பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். காசநோயை ஒழிக்க அரசுத் துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் எனக் கூறினார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில்; அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் பா.மோகன், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள், மருத்துவமனை பணியாளர் வேம்பன், செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளர்கள்;, காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


