தமிழகத்தின் தென்பகுதிகளான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கடந்த வருடத்தில் முறையாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதன் காரணமாக கருங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான சேரகுளம், இராமானுஜம்புதூர், இலுப்பைகுளம், வெட்டிகுளம், தீராத்திகுளம், அரசர்குளம், வல்லகுளம் போன்ற பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட பம்புசெட் அமைத்து விவசாயம் மேற்கொண்ட வந்ததில் மழை இல்லாத காரணத்தினால் வாழைகள் உள்பட அனைத்து பயிர்களும் கருகி விட்டது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் சேரகுளம் கிராம கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் ரெங்கன் ஆகியோர் மாவட்ட ஆட்சிரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எங்கள் பகுதி கருங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த சேரகுளம் கிராமம். இங்கு சுமார் 100 பம்பு செட் விவசாயிகள் உள்ளனர். இங்கு பம்பு செட் மூலம் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் வாழை, தென்னை, கடலை, வெண்டை, கத்தரிக்காய், பருத்தி போன்ற பயிர்கள் பயிரிட்டிருந்தோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக முறையான பருவமழை இல்லாத காரணத்தினால் பயிரிடப்பட்டிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளது. மேலும் பருத்தி, கடலை, தென்னைமரங்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டது. எனவே மாவட்ட ஆட்சியர் கருணை கூர்ந்து தோட்டக்கலைத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு கருங்குளம் வட்டாரத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


