தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீருக்கு அடுக்கு விகித முறையில் கட்டணம் நிர்ணயம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் இணைப்பு கட்டணம் அடுக்கு விகித முறையில் வசூலிப்பது, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிப்பது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசும்போது, “குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், குடிநீர் இணைப்புகளுக்கு அளவு மானி இல்லாத காரணத்தினால் அடுக்கு விகித முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.
மாநகராட்சி உறுப்பினர் சுரேஷ் பேசும்போது, “தூத்துக்குடி 2ஆம் கேட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருமண மண்டபத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் என்.பெரியசாமியின் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


