தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய இக் கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் ஜாய்ஸ்லின் ஷர்மிளா தலைமையேற்று நடத்தினார். கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் கல்வியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி அனுசியா வரவேற்றார்.
இக்கருத்தரங்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ரமேஷ் கலந்து கொண்டு பேசும் பொழுது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்பட்டது.
முன்னதாக, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசின்மேற்பார்வையில் இருந்து வந்தது. தொலைத்தொடர்பில் வெளிப்படையான சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும், சந்தையில் நியாயமான கட்டணங்களையும், சேவையை வழங்குவதை உறுதிசெய்யும் நோக்குடன் இந்திய தொலைதொடர்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் செயல்பாடுகள், தொலைதொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களின் குறைபாடுகள், சச்சரவுகள் இவற்றை தீர்வு செய்யும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தூத்துக்குடி கோட்ட பொதுமேலாளர் சாந்தி, துணைப் பொதுமேலாளர் லிங்க பாஸ்கர், இளநிலை பொறியாளர் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு மொபைல் போன் பயன்பாடு மற்றும் இணைய வழி குற்றங்களை தடுக்கும் முறைகள் குறித்தும் இணைய வழியில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் நிலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இக்கருத்தரங்கை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.திருநாவுக்கரசு ஒருங்கிணைத்து வழிநடத்தினார். கருத்தரங்கு நிறைவில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் சுதாகுமாரி நன்றி கூறினார்.


