வல்லநாடு ஆற்றுப் பாலத்தின் ஸ்திரத் தன்மை குறித்து பொறியியல் வல்லுநர்கள், உயர் மட்ட அரசு அதிகாரிகள், தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்கள் கொண்ட முத்தரப்பு குழுவை உடனடியாக அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி ரூ சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில்,”2013ல் ரூபாய் 349.50 கோடி செலவில் 47.25 கி.மீ தூரத்திற்கு தூத்துக்குடி திருநெல்வேலி ரோட்டில் வல்லநாடு ஆற்றுப் பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலம் பலமுறை சேதமடைந்து, குழி ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த பாலம் மீண்டும் பழுதடைந்து உள்ளதாக தெரிய வருகிறது. கட்டப்பட்ட சில ஆண்டிற்குள் பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதுபோல் பல முறை ஓட்டை விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்த பிறகு ஐந்தே மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து தற்பொழுது பேஜ் ஒர்க் நடைபெற்றது. ஆனால் பேஜ் ஒர்க் செய்த இடத்தில் மீண்டும் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் அடிக்கடி பழுதடைவது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறு அடிக்கடி பாலத்தின் இரு பகுதியும் பாதிக்கப்படுவது இந்த பாலம் சரியான முறையில் கட்டப்படாததே காரணம் என தெரிகிறது. ஆகவே இந்த பாலத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவழிக்கப்பட்டதா என்பதை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டுமெனவும், மேலும் இந்த பாலத்தை பொறியியல் வல்லுநர்கள், உயர் மட்ட அரசு அதிகாரிகள், தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்கள் ஆகியோர்களைக் கொண்ட முத்தரப்பு குழுவை உடனடியாக அமைத்து ஆய்வு செய்து பாலத்தின் ஸ்திரத் தன்மை குறித்து அறிக்கை வெளியிடுமாறும் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


