தாமிரபரணியில் எத்தனை அணை உள்ளது என கேட்டால் மொத்தம் 8 தடுப்பணை உள்ளது என கூறிவிடுவோம். இந்த அணைகள் எல்லாம் தடுப்பு அணைத்தான். ஆனாலும் பிரபல மானவை. ஆனால் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணமாக மற்றொரு அணைக் கட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அதுவும் தாமிரபரணி கரையில் காணப்படுகிறது. இது சிறப்பான அணைக்கட்டாகும்.
அது தான் தருவை கிராமத்தில் உள்ள மிகவும் சிறப்பான அணைக்கட்டு.
பளையங்கால்வாய் பழவூரில் இருந்து பிரிந்து மாணிக்கநகர் , கோபால சமுத்திரம் வழியாக ஓடி தருவை அருகில் பச்சையாற்றை கடக்கும் இடத்தில் தான் இந்த அணை உள்ளது. பாளையங் கால்வாய் தனது பாதையில் ஓட வேண்டும். அதேவேளையில் பாய்ந்து வரும் பச்சையாறு இந்த கால்வாயை கடந்து தாமிரபரணியில் கலக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இதனருகே வாணிப ஓடை என்ற பெயரில் மற்றொரு ஓடையும் ஆறுபோல ஓடி வருகிறது. இந்த ஒடை பச்சையாற்றின் வலது புறத்தில் ஒடிவரும் குட்டி நதிபோன்ற ஒடையாகும். இந்த இரு நீரோட்டத் தினையும் தாண்டி பாளையங் கால்வாய் தாக்கு பிடித்து மேலப்பாளையம் நோக்கி ஒடி வரவேண்டும். இது எப்படி சாத்தியமாகும். இதை சுமார் 600 வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் யோசித்து இந்த அணையை கட்டியிருக்கிறார்கள். இந்த அணைக்கட்டின் தொழில் நுட்பம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
பச்சையாற்றில் அதிக தண்ணீர் வந்து பாளையங்கால்வாயில் ஓடினால், பாளையங்கால்வாய் கரை உடைந்து விடும், அல்லது மேலப் பாளையம் உள்பட கரையோரம் உள்ள ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும். இதனால் பெரும் அழிவு ஏற்பட்டு விடும். இதையும் தடுக்க வேண்டும்.
அல்லது பச்சையாறு தனது ஒடிச்செல்லும் பாதையில் பாளை யங்கால்வாய் வந்து விழுந்தால், ஓடி வரும் பச்சையாற்றுடன் இணைந்து தண்ணீர் தாமிரபரணிக்குள் கலந்து விடுமே தவிர. அங்கு தேங்கி மீண்டும் தருவை கிராமத்தினை தாண்டி ஓடியிருக்காது. அப்படி நடந்திருந்தால் பாளையங்கால்வாய் என்றதொரு கால்வாயே இருந்து இருக்காது. அப்படி இருக்கும் போது நமது முன்னோர்கள் கட்டிய அணை யினால் பாளையங்கால்வாய் தனது பாதையில் ஓடுகிறது. வாணிப ஓடையும் பச்சையாறும் தன் வழியே தாமிரபரணியை நோக்கி ஓடுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது.
இந்த ஆச்சரியமான நீர் மேலாண்மையை நமது முன்னோர் கள் மிகச்சிறப்பாக செய்து இருக் கிறார்கள். தாமிரபரணியில் உள்ள எட்டு தடுப்பணையை விட பச்சையாற்றில் கட்டப்பட்ட தருவை தடுப்பணைத்தான் மிகச்சிறப்பானது என்றே கூற வேண்டும். எனவே தான் இந்த அணையை பற்றி அறிய , நேரில் சென்று பார்க்க் வேண்டும் என ஆசைப்பட்டேன்.
நான் பலரிடம் இந்த அணையை கேட்டு வந்தேன். ஆனால் யாரும் சரி வர பதில் சொல்லவில்லை. எனவே நான் நேரில் சென்று அதை காண வேண்டும் என திட்டமிட்டேன். தருவை கிராமம் செல்ல 28.03.2024 அன்று நேரம் குறித்தோம். காலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி னோம். காரை சிஷ்யன் சுடலை மணிச் செல்வன் ஒட்ட துணைக்கு பேரன் திருப்பதி ஏறிக்கொண்டார். சரியாக 6.30 மணிக்கு ஆரைக்குளம் வந்துசேர்ந்தோம். அங்கு நண்பர் காமராஜ் அவர்களை சந்தித்தேன். (விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் அந்தோணி அவர்களின் சகோதரர் இவர். ஆரைக் குளத்தில் மதராஸ் கபே என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார்கள்).
இதற்கிடையில் எனக்கு தருவை கிராமத்தில் களப்பணி செய்ய உதவிய மந்திரி அவர்கள், தனது வேலை காரணமாக வெளியூர் சென்ற காரணத்தினால் தீடிரென்று வர இயலவில்லை என போனில் தகவல் கூறிவிட்டார். கோபால சமுத்திரம் எக் பவுண்டேசன் நிறுவனர் நிவேக் வருவதாக கூறியிருந்தார். அவரும் போனை எடுக்க வில்லை. என்ன செய்ய என்று யோசிக்கும் போது தான் காமராஜ் அவ்விடத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மந்திரித்தான். (தருவையில் பல பேருக்கு மந்திரியம்மன் பெயர் உள்ளது)
இவர் கேபிள் டிவி வைத்திருக்கும் மந்திரி. “இவரிடம் தருவை தடுப்பணையை காட்டுங்கள்” என என்னோடு அனுப்பி வைத்தார் ஆரைக்குளம் காமராஜ்.
அந்த மந்திரி முன்னால் பைக்கில் செல்ல நாங்கள் பின்னால் கிளம்பினோம். கிட்டத்தட்ட அடுத்த 15 நிமிடத்தில் தருவை வந்து சேர்ந்தோம்.
அங்குள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் காரை நிறுத்தி விட்டு உள்ளே இறங்கினோம். கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவில் அந்த தடுப்பணை இருந்தது. இந்த தடுப்பணையில் தான் ஆங்காங்கே நிறைய ஷட்டர் வைத்து இருந்தனர். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் வந்தால் அந்த தண்ணீர் வடிந்து ஒட வடிகால் வைத்து இருந்தார்கள். மழை காலத்தில் தண்ணீர் கொட்டும் போது ஏரியல் வியூவில் ஒரு புகைப்படமோ, வீடியோவோ இந்த பகுதியை எடுத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். சொர்க்கலோகமே கண்ணில் தெரிவது போல இருந்தது. இந்த தடுப்பணை மூன்று பிரிவாக காணப்பட்டது.
பச்சையாறு ஒடும் கிடத்தில் தூரம் குறைவாக இருந்தாலும் மிக உயரமாக தடுப்பணை இருந்தது. இந்த இடத்தில் தான் பாளையங்கால்வாய் வந்து விழுகிறது.
அடுத்து வாணிபம் ஒடையில் மிக அகலமாக, உயரம் குறைவாக தடுப்பணை இருந்தது. அதன் நடுவில் ஒரு நடுகல் இருந்தது அதுவும் கல்வெட்டு உடன். அடுத்து கிட்டத்தட்ட இரண்டு பர்லாங் கரை அமைத்து அதன் பிறகு இரு வழிந்தோடும் மடையோடு, மீண்டும் பாளையங்கால்வாய் துவங்கியது. பாளையங்கால்வாய் துவங்கும் இடத்தில் ஷட்டர் போட்டிருந்தார்கள்.
இந்த ஷட்டர் மிகுதியாக பச்சையாற்றில் தண்ணீர் இருந்தால் , பாளையங்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த ஷட்டர் எல்லாம் உடைந்து மோசமான நிலையில் கிடந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்தும் கூட, பொதுப்பணித்துறையினர் இதை கண்டு கொள்ளவில்லை. அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால் இவ்விடம் நமது முன்னோர்களின் அறிவு திறனை காட்டும் வண்ணம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் இந்த இடத்தில் மாற்று வேலை நடந்து இருக்கும் போல, அப்படி வேலை செய்யும் போது ஒரு சிவன் கோயிலை இடித்து வந்து இந்த அணையை கட்டியிருக்கலாம் போல தோணுகிறது. அதற்கு அடையளமாக, அணையில் கட்டப்பட்டுள்ள கல்லில் லிங்க வடிவம், மற்றும் கோயில் கல்களில் உள்ள சிற்ப வடிவங்கள் காணப்படுகிறது.
முதல் முதலில் அவ்விடத்தில் ஐந்து கண் மடை என்று கூறப்படும் மடையை நோக்கி நடந்தோம். அந்த மடை நம்மை ஆச்சரியத்தையும் அற்புதத்தினையும் எற்படுத்தும் வண்ணம் இருந்தது. அந்த சமயத்தில் எங்களை பார்க்க கோபாலசமுத்திரம் நிவேக் வந்து சேர்ந்தார்.
(நதி வற்றாமல் ஓடும்)