நான் எழுதி சுவடு பதிப்பகம் வெளியிட்டு தீதும் நன்றே நாவல் குறித்து நெல்லை டவுணை சேர்ந்த எழுத்தாளர் ஜெயபாலன் அய்யா விமர்சனம் எழுதியுள்ளார்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி. நூல் வேண்டுவோர் சுவடு பதிப்பகம் 9551065500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். விமர்சனம் எழுதிய ஜெயபாலன் அய்யாவுக்கு மிக்க நன்றி – அன்புடன் முத்தாலாங்குறிச்சி காமராசு

ந.ஜெயபாலன்,
633. காவேரி சாலை,3-வது பிரதான வீதி,
கோடிசுவரன் நகர் -திருநெல்வேலி -6
jeyabalanesai@gmail.com
முத்தாலாங்குறிச்சி காமராசு அவர்களின் “தீதும் நன்றே”என்ற புதினம் குறித்த என் பார்வை.
இதனை விமர்சனம் என்றோ திறனாய்வு என்றோ நான் கூறத் துணியவில்லை.
எனவே, நான் ரசித்ததும்..ருசித்ததும் பற்றி மட்டும்தான் பேசப்போகிறேன்.
காரணம், நான் அந்த பார்வையுடன் இந்த நூலை புரட்டவில்லை. திரு.முத்தாலங்குறிச்சியாருக்கு புதினங்கள் படைப்பது ஒன்றும் புதிய செய்தி இல்லை. இந்நூலின் நான்காம் பக்கத்திலுள்ள எழுத்தாளரைப் பற்றி என்ற பகுதி இவரது முந்தைய சிறுகதைகளின் படைப்பை பற்றி தெளிவுப் படுத்துகிறது.
கதைக்களம் மும்பையின் பரபரப்பான தாராவி பகுதியிலிருந்து தொடங்குகிறது.
ஓரளவு வாசிப்பு அறிவு படைத்த வாசகனுக்கும் நன்கு தெரியும், தாராவி.பஞ்சம் பிழைக்க சென்ற,செல்லும் தமிழ்மக்களின் அடைக்கல பூமியென்பது. தமிழர்கள் செறிவாக வாழும் பகுதி. சோகங்களும்,கொஞ்ச நேரத்து சந்தோஷங்களும் இங்கு உண்டு. நாம் நின்று கொண்டிருப்பது மும்பை என்பதை மறந்து விட்டால், தமிழகத்தில்,தமிழர்கள் செழித்திருக்கும் எதோ ஒரு சேரிப் பகுதி என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.
உலகோடு, நம் ஊரும் அடங்கிக் கிடந்த தீ நுண்மி காலத்திலிருந்து கதை தொடர்கிறது.
எழுத்தாளருக்கு முத்துக்கிளி என்ற பெயரில் ஒரு காதல் இருக்கிறது. என்னுரையில் அதை உண்மை என்று ஏற்று கொண்டிருக்கிறார். ஒருவேளை மகள்,தன் தாய், தாரம் இவர்களில் யாரோ ஒருவருடைய பெயராகக் கூடஇருக்கக் கூடும். ஒருவேளை மனசுக்குள் புதைந்திருக்கும் அந்த நாள் காதலியாகவும் இருக்கலாம். ஒரு வாசிப்பாளனாக நான்இப்படித்தான் இந்த பெயரை ஏற்றுக் கொள்கிறேன்.
ஒன்பதாம் பக்கத்திலிருந்து தொடங்கும் இக்கதை 280ம் பக்கத்தில் நிறைவு பெறுகிறது. 271 பக்கங்களில் 18 அத்தியாயங்களில் இவரது கதை மாந்தர்கள் நடைபோடுகிறார்கள்.
ஒவ்வொரு மனதுக்குள்ளும் சொல்லப்படாத காதல் ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்பதை “35 வருடங்களாக வாசு பாதுகாத்து வந்த கருப்பு பாசி மாலை” பகுதியில் தமிழ் பண்பாடு மீறப்படாமல் சொல்லிச் செல்லும் காதல் செய்தி கவிதையின் அழகுதான் என்று குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்றுதான்.
வால்மீகி இராமாயணம் இராமனின் இயற்கை இயல்புகளை சுட்டிக்காட்டுவதை, தமிழுக்குத் தரும்போது கம்பன்,குற்றம் களைந்து குணங்களை மட்டும் சொல்லும்போது, எத்தனை உயர்வுக்கு சொந்தக்கார னாகிவிடுகிறான் என்பதை கம்பராமாயணம் தெரிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி.
இந்த கதை ஓட்டத்தில்,இந்தப்பகுதியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சியார் அப்படித்தான் எழுந்து நிற்கிறார்.
வந்தே பாரத் தொடரியின் வேகத்தில் ஒவ்வொரு காட்சியும் இடம் பெறுவது கூடுதல் சிறப்பு.
பிற்பகுதி மீட்டர்கேஜ் புகைவண்டிப்பயணம்.
மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு கதை மாந்தர்களும் தன் நினைவு அலைகளை அசை போடுவதாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக,தொலைந்து அல்லது நாம் தொலைத்து கொண்டிருக்கும் மண்ணின் வாசத்தை…பல நிலைகளில் படிமங்களாக்கும் உத்திபாராட்டுதலுக்கு உரியதுதான்.
பேருந்து,இரு சக்கர வாகனம், வாடகைக் கார் போன்ற பல வசதிகளுடன் வாழந்து கொண்டிருக்கும் நாம், நேற்றைய நம் உறவுகள் மாட்டு வண்டி பயணத்தையும், சுழித்தோடும் ஆற்று நீரை தன் மன வலியால் சுலபமாக கடந்து வந்த நிகழ்வுகளையும் மிக அழகாக சொல்வதும், கண்ணுக்குத ;தெரியாத அந்த
நேற்றைய நாட்களை நம் நெஞ்சுக்குள் நிலழாட வைக்கிறது என்பதும் மிகையானதில்லை.
தென் தமிழ்நாட்டின் மனித அடையாளமாக விளங்கும்,ஒரு குறிப்பிட்ட சமுகத்தை (நாடார் இனமக்களின் நேற்றைய வாழ்வையும், வாழ்வியல் முறையையும்) வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இயல்பாகவும், வரம்பு மீறாமாலும் தன் எழுத்தில் முத்தாலங்குறிச்சியார் கொண்டு வந்திருப்பதும் நன்றாகத்தானிருக்கிறது.
சமூகவியல் ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கு இது மிகவும் உதவி செய்யும் என்பதில் மாறு கருத்து இல்லை.
ஒரு சமுகத்தின் மதம் சார்ந்த நம்பிக்கை. அதனைஈ அவர்கள் நடைமுறைப் படுத்தும் செயல் முறைகள் மிகவும் துள்ளியமாக தன் எழுத்து பதிவுகளாக்கி தந்திருக்கிறார் கதாசிரியர்.
பொதுவாக நம் தமிழ் இன மக்களிடம்,ஆரியர்களின் வருகைக்குப் பின் திணிக்கப்பட்ட செய்திகளும்,மூட நம்பிக்கைகளும் ஏராளமாக மலிந்திருக்கிறது என்பதும் இன்றளவும் மறுக்க முடியாத உண்மைதான்.
இவைகள் மாற இன்னும் எத்தனைப் பெரியார்கள் வரவேண்டியதிருக்குமோ என்ற கவலை என்னுள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
படித்த மனிதர்களிடை பரவிகிடக்கும் இத்தனை நம்பிக்கைகளின் வேர்கள்,பாமரமக்களான கிராமத்து மனிதர்களிடம் இன்னும் அழுத்தமாகத்தான் வேரூன்றி கிடக்கிறது என்பதும் மறுக்கப்படாத செய்திதான்.
சின்ன எடுத்துக் காட்டு, முத்துக்கிளி “மூல” நட்சத்திரத்துக்கு சொந்தக்காரி. மூல நட்சத்திரம் உள்ள ஆணுக்கோ..பெண்களுக்கோ..வரன் பார்ப்பதில் எத்தனை சிக்கலுண்டு என்பதையும் இக்கதை பேசுவது நல்ல பார்வைதான்.
வந்த இடத்தில் தன்னை நன்றாக உபசரிக்கும் அந்த சின்னப்பையன் காாத்திக் ,சாதிப் பிரச்சனை வந்தால் தன்னை உதறிவிடக்கூடும் என்ற சந்திரனின் எண்ண ஓட்டம் எல்லாம் மிக இயல்பாக சொல்லப்பட்டுள்ளது.
பட்டண வாழ்க்கையில், பீட்சாவும்,பர்க்கருமே சாப்பிட்டு வாழும் வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்க்கை என்ற கற்பனைக்கு திணிக்கப்பட்டிருக்கும் இன்றை நாட்களின் மனிதர்களுக்கு, நம் கிராமங்களில் ஆற்று மீனும்,குளத்து மீனும் தரும் சுவையே சொர்க்கம் என்ற வாழ்வியல் எதார்த்தமும் கதைப்படுத்தப்பட்டிருப்பதும் நான் ரசித்த பகுதிகள்தான்.
நாடரின மக்கள் சொல்லிக் கொள்ளும் உட்சாதிப் பிரிவுகளையும் இக்கதை பேசத்தான் செய்கிறது.
உட்டசாதிப் பிரிவுகளால் பெண் கொடுக்கல்..வாங்கல் என்பதும் சிக்கலான ஒன்றுதான் என்பதையும்,
கோவில் பொருட்களை எடுத்துச் செல்ல வரும் சந்திரனிடம் உள்ளூர் பெரியவரின் சொற்காளாக கதாசிரியர் அதனை தெளிவுப் படுத்துவதும் யதார்த்தம்.
கிராமங்களில் கோவில் விழா கொண்டாடப்படும் விதங்களும் உண்மை.அருமை.
கணியான்கள் இருக்கிறார்கள்.கணியான்களின் கூத்து காணாமல் ஆக்கப்பட்டுவிட்ட நாட்கள். வில்லிசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். வில்லும் வேண்டிய உபகரணப் பொருட்களும்இருக்கிறது. கேட்டு ரசிக்கத்தான்ஆளில்லை என்ற வறட்சியான நாட்களில் கணியான் கூத்து பற்றி பேசுவதும் நல்ல யுக்திதான்.
கிராமத்து பொடிசுகளும,; செல்லும் -செல்லூலர் உலகமென வாழ ஆரம்பித்து விடட் நவீன தொழில் நுட்பங்களின் வருகையும்,பாதிப்பும் சொல்லப்படுவது சமூகப் பார்வை.
கோவில் கொடை விழா நாட்களில், ஊர் சாப்பாடும் ஒரு உளவியல் சார்ந்த செய்தியாக பார்க்கப்படுவதும் நல்லதுதான்.
உழைக்கும் மக்கள் ஓய்வெடுக்கவும், உற்சாகமாக கோவில் கலை விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் செய்யப்படும் மாற்று ஏற்பாடுதான் அதுஎன்பது நான் மிக மிக ரசித்த இடம்.
ஊர் சாப்பாடு வழங்கும் முறையும் நன்றாக சொல்லப்பட்டுள்ளது.
மண்..மக்கள்…இயல்பான வாழ்வியல் முறை… மறுதலிக்கப்படாத வாழ்வியல் சொல்லாடல்கள் எல்லாம் மண்ணின் மணம் கொண்டுள்ளது.
மங்களகரமாக கதையை முடிக்க வேண்டும் என்று கருதாமல் வலிந்து ஒரு திருமண பந்தத்தை (சந்திரன் – முத்துக்கிளி) உருவாக்காமல், முத்துக்கிளியின் இனிய நினைவுகளோடு சந்திரன் புறப்படுவதும் அருமை.
ஒரு பாரதிராசாவின் மண்வழிப் பயணம்…பாலசந்தரின் சொல்லாடல் நேர்த்தி… இக்கதை கொண்டுள்ளது.
என் மண்..என் மக்கள்…என் பயணம் (அரசியல் அல்ல) என்ற பாதை..பார்வையுடன் பயணிக்கும் கதை ஓட்டம்… நெல்லை மண்ணை சொல்லும் அளவில் கால் பகுதியாவது மும்பையின் தாராவியை கதாசிரியர் சொல்லியிருக்கலாம்.
நிறைவாக அருமை என்ற மூன்று சொல்லோடு வாழ்த்துகள் என்ற ஐந்து தமிழ் சொல்லெடுத்து நிறைவு செய்கிறேன்.


