செய்துங்கநல்லூர் சிவன் கோயில் மிகவும் பழமையானது. சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் என இங்குள்ள தெய்வம் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் பதஞ்சலி முனிவர் பெயரில் சிவன் இருப்பதால் மிகவும் விசேஷம் என போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் பதஞ்சலி முனிவர் நடராஜரின் நடன காட்சியை பார்த்தது போலவே இந்த ஆலயத்திலும் கண்டார், எனவே இந்த ஆலயம் தென் தில்லை என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் பதஞ்சலி முனிவரின் குருபூஜை விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிவன் மற்றும் சக்தி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வணங்கினர். இந்த பூஜை ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குருமாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள், முத்துராமன், பால–சுப்பிரமணியன் மற்றும் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.


