மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் அல்லது நீல மயில் இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளில் ஒன்றாகும். இது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ பேரினத்தினுள் அடங்கும், cristatus என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றின் பூர்வீகம் இந்தியத் துணைக்கண்டமாக இருப்பினும், இவை உலகின் பல பாகங்களில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டதால் அங்கும் பரவி காணப்படுகின்றன. பேவோ பேரினத்தினுள் வரும் மற்றொரு இனமான muticus பச்சை மயில் என அழைக்கப்படும்.இவை இரண்டும் தென்னாசியாவிற்குரிய பெரிய வண்ணமயமான கோழி இனவகைப் பறவைகளாகும்.இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக இறகுகள் போன்ற பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீல வட்டங்களையும் கொண்டிருக்கும். தோகையில் உள்ள சில சிறகுகளின் முனை பிற வடிவத்தில் இருக்கும். ஆண் மயில் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். எனினும் வால் சிறகுகள் 20 மட்டுமே.பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது. இவற்றின் கழுத்து, பளபளக்கும் பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்ட செதில் வடிவ இறகுகளைக் கொண்டும், வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், இருக்கும். இவை ஆண் மயில்களை விட உருவில் சிறியவை. சுமார் 95 செ.மீ. நீளமும், 2.75-4 கிலோ எடையும் உடையவை. கோழி வகைப் பறவைகளிலேயே மயில்கள்தான் உருவில் பெரிதாகவும், எடைமிக்கதாகவும் விளங்குகின்றன.மயிலின் ஆண், பெண் இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். ஆண் மயிலின் முகத்தில் கண்ணின் மேலும், கீழும் வெள்ளை நிறத்தில் பிறை வடிவில் அடர்ந்த சிறகுகள் இல்லாத பட்டைகள் போன்ற இறகுகள் இருக்கும். பெண் மயிலில் முகத்தில் கண்களுக்கு மேல் வெள்ளை நிறப் பட்டையும், முகத்தின் பக்கவாட்டிலும், கழுத்து ஆரம்பிக்கும் பகுதியிலும் வெள்ளையாக இருக்கும்.