சாத்தான்குளம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சந்திரசேகர் (46). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அடிக்கடி மது அருந்தியதால் ரத்த வாந்தி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மது அருந்தி வந்து வீட்டில் படுத்துறங்கியுள்ளார். மறுநாள் வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் உறவினர்கள் திறந்து பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர் சுந்தர்ராஜ் மனைவி செல்வம் (56) தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பென்சன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சந்திரன் (54). இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்களைகள் உள்ளனர். குடும்பத்துடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சொந்த ஊருக்கு வந்த சந்திரன் மது அருந்தி கொண்டு அங்குள்ள வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் வீட்டில் இறந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் பொன்ராஜ் (45) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குபதிந்து விசாரித்தார். விசாரணையில் அவர் அளவுக்கு அதிகாக மது அருந்தியதால் இறந்து போனது தெரியவந்தது.


