ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்து 2 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு 45 ஆடுகள் திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான தோட்டம் தாதன்குளம் காட்டுப்பகுதியில் கல்குவாரிக்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த தோட்டத்தில் மாரியப்பன், தாதன்குளத்தைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் கருங்குளத்தைச் சேர்ந்த பேச்சியப்பன் ஆகியோருக்கு சொந்தமான் 350க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. இந்த ஆடுகளை அருணாசலம் மற்றும் பேச்சியப்பன் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அலைத்துச் சென்று மாலையில் தோட்டத்தில் அடைக்கப்படும். இந்த நிலையில் நேற்று மாலை இந்த ஆடுகளை அனைத்து மேய்ச்சலுக்கு சென்று விட்டு தோட்டத்திற்கு வந்துள்ளது. அருணாசலமும், பேச்சியப்பனும் தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தோட்டத்திற்குள் 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. இதனை பார்த்த அருணாசலமும், பேச்சியப்பனும் வெளியில் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரையும் அரிவாளால் தாக்கி அந்த அறையில் வைத்து அடைத்துள்ளனர். அதன்பின்னர் அந்த கும்பல் ஒரு வாகனத்தை தோட்டத்திற்குள் கொண்டு வந்து தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடி விட்டது. ஆடுகளை அடைக்க பயன்படுத்தப்படும் தடுப்பு கம்புகளையும் அந்த கும்பல் திருடிச் சென்று விட்டது.
பின்னர் காலை 5 மணிக்கு அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து நடந்த விபரத்தை உறவினர்களிடம் கூறினர். பின்னர் இதுகுறித்து சேரகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காயமடைந்த அருணாசலமும், பேச்சியப்பனும் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் சதீஷ், சேரகுளம் போலீசார் நேரில் வருகை தந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


