செய்துங்கநல்லூர் சிவன்கோயில் திருவிழாவை முன்னிட்டு, தல வரலாறு சிறப்பு கட்டுரை. இதே போல் நான் தரிசித்த 200 கோயில்களை தொகுத்து அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் என்ற நூலை 1036 பக்கம் எழுதியுள்ளேன். விரைவில் நூல் வர உள்ளது. நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் முன் பதிவு செய்யவும்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
செய்துங்கநல்லூர் சிவன் கோயில் தொடர்ப்பு எண் -முத்துராமன் அர்ச்சகர் 8138055143.
செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வர் – தல வரலாறு
உத்திரதேசம் என்ற நாட்டின் அரசனாகச் சிங்கவர்மன் வாழ்ந்து வந்தான். அவன் நல்லாட்சி செய்யாமல் தவறான வழியில் நடந்தான். ஒரு காலகட்டத்தில் தான் செய்த தவறை உணர்ந்து அரியணையே துறந்தான். கால்போன போக்கில் காட்டுப்பகுதியில் அலைந்து திரிந்தான். வெயில் அவனை வாட்டி வதைத்தது. சிங்கவர்மனுக்கு தாகம் எடுத்தது. அந்தக் காட்டுக்குள் எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. நாக்கு வறண்ட நிலையில் ஒரு மரத்தின் அடியில் சாய்ந்தான். அது சமயம் அங்கு வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவனிடன் சிங்கவர்மன் “தாகத்தால் எனது நா வறண்டு விட்டது. பல இடங்களில் தேடி அலைந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதற்கு மேல் என்னால் அலையவும் முடியவில்லை. எனவே, எங்காவது தண்ணீர் கிடைத்தால் கொண்டு வா” என்றான்.
அந்த வழிப்போக்கன் காட்டுக்குள் சென்று விட்டு மீண்டும் அரசனிடம் வந்தான். “அரசே அருகிலே ஒரு வனம் இருக்கிறது. அதற்கு தில்லைவனம் என்று பெயர். அதன் நடுவில் ஒரு குளம் இருக்கிறது. அங்கு சென்றால் நீர் தாகம் தணிக்கலாம்” என்றான். சிங்கவர்மன் மகிழ்ந்தான். வழிப்போக்கன் காட்டிய திசையில் சென்றான். அங்கு தில்லைவனத்திலே குளம் இருக்க கண்டான். அதில் இறங்கி கை நிறையத் தண்ணீரை அள்ளிக் குடித்து தாகம் தீர்த்தான். தாகம் தீர்ந்தவுடன் புத்துணர்வு பெற்றான். அந்தக் குளத்தை விட்டு வெளியேறும் போது தான் அதை கவனித்தான். அந்த இடத்தில் புலி வடிவமும், பாம்பு வடிவமும் கொண்ட இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அதிர்ந்த அவன் முனிவர்களை நோக்கி வணங்கி நின்றான். கண் விழித்த முனிவர்களில் ஒருவர் சிங்கவர்மனிடம், ‘‘நான் பதஞ்சலி. அருகில் இருப்பவர் வியாக்கிரபாதர். மனுநீதி தவறாது ஆளும் மன்னனாக உன்னைக் காண நாங்களும் ஆசைப்படுகிறோம்?’’ என்றார்.
தான் செய்த தவறை உணர்ந்த மன்னன் “என் பாவம் தீர நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான். “உன் பாவம் தீரும் காலம் வந்து விட்டது. நீ இந்தக் குளத்திலே மூழ்கி எழுந்தால் உனது பாவம் தீரும்” என்றார்கள் முனிவர்கள். சிங்கவர்மனும் அவ்வாறே குளத்தில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்று புதுப்பொலிவுடன் எழுந்து வந்தான்.
பின்னர் முனிவர்களிடம், ‘‘ரிஷி பெருமக்களே, இந்த இடத்தில் நீங்கள் தவம் செய்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டான். மன்னா, ‘‘இந்தத் தில்லைவனம் பரம ரகசியமான முக்கியமான ஸ்தலமாகும். இந்த தீர்த்தம் சிவனின் வடிவம். இதற்கு சிவகங்கை என்று பெயர். இந்த அகண்ட வனத்துக்குள் தான் நடேச பெருமான் திருநடனம் புரிந்தார். அதை நாங்கள் தவத்தால் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்’’ என்றனர் ரிஷிகள்.
‘‘நானும் அரச வாழ்வைத் துறந்து இங்கேயே தங்கி விடுகிறேன்’’ என்றான் மன்னன். ஆனால் முனிவர்கள் தடுத்து, ‘‘அரசன் சகல உயிர்களையும் காக்கும் பொறுப்புடையவன். நீ அரசனாக இருப்பதே உயிர்களுக்கு நல்லது. வனத்தில் இருக்கக் கூடாது’’ என்றார்கள்.
அப்படியானால் நீங்கள் கண்டுகளிக்கும் நடேசபெருமானின் திருநடனத்தை எனக்கும் காட்டியருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான் சிங்கவர்மன். முனிவர்கள் அருளால் சிங்கவர்மனுக்கு நடனக்காட்சி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தான். “சுவாமி சிவபெருமானுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்?” என்று மன்னன் கேட்டான். ‘‘இத்தலம் ஏனைய தலங்களுக்கெல்லாம் மணிமகுடம் போன்றது. ஆகவே, இங்கு அற்புதமான ஆலயம் உருவாக்கி அதில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்வாயாக’’ என்று முனிவர்கள் கூறவே ஆனந்தமடைந்த அரசன் அவர்களை வணங்கி அருள் பெற்றான். அங்கிருந்து தனது மாளிகையை நோக்கி திரும்பிச் சென்ற அவன் ஆலயம் கட்டும் பணிகளைத் துவக்கினான். இதனால் தில்லை என்றும் திருச்சிற்றம்பலம் என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் சிதம்பரம் என்ற மாநகர் உருவானது.
இது போலவே தெற்கே தென்தில்லை என்று அழைக்கப்படும் தலமாகச் செய்துங்கநல்லூர் விளங்குகிறது. இங்குள்ள கோயில் கல்வெட்டில் இவ்வூர் “சேஞ்ஞலூரான் திருவரங்கச் சதுர்வேதி மங்கலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள தாயார் பெயர் பெரிய நாச்சியார். இக்கோயிலில் மொத்தம் 13 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் மிகவும் பழமையானது மாறவர்மன் ஸ்ரீ வல்லபனுடைய 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும். இம்மன்னன் காலத்தில் (1145-1162) இக்கோயில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.
மாறவர்மன் குலசேகரனின் 28வது ஆட்சியாண்டில் திருவாதவூர் நாயனாருக்கு உணவு செய்வதற்காக “சுந்தரபாண்டியன் பிரம்மாதிராயன்” என்பவன் நிலம் வழங்கினான் என்று கூறுகிறது. இக்கோயிலில் வியாக்கிரபாதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபருமானும், அம்பாள் சிவகாமி அம்மையார் என்ற திருப்பெயருடனும் உள்ளனர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணியாறு தற்போது ஓடுவதை விட சற்று மேற்காக ஓடியது. அதில் கூழையாற்று தீர்த்தம் ஒன்றுள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஜெயதுங்கபாண்டியன் என்னும் அரசன் முறப்பநாட்டைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார். இந்த மன்னன் பெயரால் இதனருகே உள்ள அனவரதநல்லூர் என்னும் ஊர் செய்துங்க நாட்டு சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படுகிறது. இதை வரதுங்க நல்லூர் என்றும் அழைத்துள்ளனர்.
செய்துங்கன் என்றால் வெற்றி திருமகன் என்று பொருள். இவர் எங்கு சென்றாலும் வெற்றி தான் கிட்டும். மன்னன் செய்துங்கன் வேட்டையாட தாமிரபரணி கரையில் உள்ள கூழையாற்றுக்கு வந்தார். அங்கே வியாக்கிரபாதீஸ்வர் மற்றும் பதஞ்சலி முனிவர் தவமிருந்த தென் சிவகங்கை குளக்கரை இருந்தது. அதில் அவர்கள் சிவனை வைத்து வணங்கி வந்தனர். மோன நிலையில் அவர்கள் இருந்த இடத்துக்கு ராஜா வந்த போது, ஒரு அதிர்வு ஏற்பட்டது. அப்போது சங்கு ஒன்று நீரோட்டத்துக்கு எதிராகப் பஞ்சாட்சரமான ‘ஓம் நமச்சிவாய’ என்னும் மந்திரத்தை ஓதிக்கொண்டே இருந்தது.
இதைப் பார்த்த ஜெயதுங்க பாண்டியன் சிவனை நோக்கி வணங்கி நின்றான். அப்போது, அங்கே வியாக்கிரபாதீஸ்வரரும், பதஞ்சலி முனிவரும் தவமிருந்த காட்சி அவருக்குத் தென்பட்டது. அப்போது அசரீரியாக, ‘வடதில்லையான சிதம்பரத்தில் யாம் காட்சி தந்தது போல இங்கேயும் காட்சி தர விரும்புகிறோம். எனவே எமக்கு கோயில் கட்டி வணங்கு’ என்று ஒலித்தது.
அதன்படி செய்துங்க மகராஜன் கோயிலைக் கட்டினார். இங்கு வழிபாடு செய்த பிறகு பதஞ்சலி முனிவர் ராமேஸ்வரம் சென்று சமாதி நிலையை அடைந்தார். எனவே, இது மிக பழமையான கோயில் என்பது புலனாகிறது.
சிவலாய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக சிறப்பான ஓட்டமாகும். இந்த ஓட்டத்தில் முக்கியமாகப் புருஷா மிருகத்தினைப் பற்றி கூறுகிறார்கள். இந்தப் புருஷா மிருகம், வண்டு முகர்வதற்கு முன்பே சிவபூஜை செய்ய புலி கால்களுடன் ஓடி வந்து பூ பறிக்கும். இது வேறு யாரும் அல்ல வியாக்கிர பாதீஸ்வரர்தான். இதை விளக்கும் விதமாக அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் புருஷா மிருகம் சிற்பம் உள்ளது. பதஞ்சலி முனிவர் அத்திரி மகரிஷி & அனுஷியா தேவியின் புதல்வர். அருகில் உள்ள அத்ரி மலையில் தான் மகரிஷியின் வாசம் உள்ளது. எனவே பதஞ்சலி முனிவர் இங்கு தவம் செய்ய ஏதுவாக இருந்துள்ளது.
இங்கு சிவபெருமானுக்கு வியாக்கிர பாதீஸ்வரர், கூழையாற்று நாதர், திருவரங்ககேஸ்வரர், திருப்புலிஸ்வரமூடையார் போன்ற திருப்பெயர்கள் உண்டு, தாயார் பெரிய நாச்சியார் மற்றும் சிவகாமி அம்மை என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊரில் திருவரங்க செல்விஅம்மன் என்ற ஆலயம் சற்று மேற்கே வாய்கால் கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள கால்வாய் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்வதால், இதை தெட்சண கங்கை என்றும் அழைக்கிறார்கள்.
செய்துங்கநல்லூர் என்றால் சேய் அதாவது குழந்தைகள் தூங்க நல்லூர் என்று பெயரைப் பிரித்து கூறுவார்கள். இங்கு கழனியில் வேலைசெய்யும் பெண்கள் தங்களது குழந்தைகளை மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு வேலை செய்வார்களாம். பொதிகை மலையில் இருந்து வரும் தென்றல் காற்றின் சுகத்தில் அந்தக் குழந்தைகள் அயர்ந்து தூங்கி விடுமாம். ஆகவே சேய் தூங்க நல்லூர் தான் செய்துங்கநல்லூர் என ரா.பி.சேது பிள்ளை மூன்று அடைமொழி கொண்ட ஊர் என்று செய்துங்கநல்லூரை கூறுவார். செய்து உண்க நல்லூர் என்றும் பிரித்து அவர் பேசுவர்.
இந்தக் கோயிலில் யோக தட்சணா மூர்த்தி வியாக்கிரபாதீஸ்வரருக்கும், பதஞ்சலிக்கும் மோன நிலையில் உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, கல்வியில் சிறப்பு பெறவும், நினைவாற்றல் பெருகவும், உயர்ந்த நிலையை அடையவும் இந்த தட்சணா மூர்த்தியைப் பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.
இக்கோயிலில் பிரதோஷம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி, அஷ்டமி பைரவர் பூஜை, சங்கடஹர சதுர்த்தி பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலுக்கு வெளியே சிவகங்கை என்றழைக்கப்படும் குளக்கரை உள்ளது. இந்தக் குளக்கரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். கிழக்கு பகுதியில் இருந்து உள்ளே நுழைந்தால் வெளிபிரகாரம் உள்ளது. அங்கே நவக்கிரகங்கள், பைரவர், நந்தி தேவர் உள்ளனர். கோயிலைச் சுற்றி வந்தால் தெற்கு நோக்கி யோக நிலையில் தட்சணா மூர்த்தி உள்ளார். தவம் செய்வது போல உள்ள அவரை வணங்கினால் நமக்கு அனைத்து நன்மைகளும் கிட்டும். அருகில் கன்னி மூல விநாயகரும் இவருக்கு அடுத்தாற்போல் பாலசுப்பிரமணியரும் உள்ளனர்.
10 அடி உயரத்தில் ஒரே கல்லில் பாலசுப்பிரமணியர் வடிக்கப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். இந்தப் பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார மக்கள் இவர் முன்பு திருமணம் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இங்கு திருமணம் முடித்தால் அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாலசுப்பிரமணியரைத் தொடர்ந்த சண்டிகேஸ்வரர் உள்ளார். அவரை வணங்கி நவக்கிரக மூர்த்திகளை நாம் தரிசிக்கலாம். இந்த கோயிலில் சுப்பிரமணியசுவாமி முன்பு புற்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புற்று மண் மருத்துவ குணம் படைத்தது. நாகதோஷம் போக்க பக்தர்கள் இங்கு வந்து வணங்குகின்றனர். கோயிலின் தல விருட்சமான வில்வம் சிவபெருமான் சன்னதி பின்புறம் உள்ளது.
இங்கு மகாலிங்க மரமும் ஒன்றுள்ளது. இந்த மரம் மருத்துவ குணம் வாய்ந்தாகும். சித்த மருந்து தயார் செய்பவர்கள், எந்த நோயாக இருந்தாலும் மகாலிங்க மர பட்டையை மருந்தோடு சேர்த்துக் கொள்கிறார்கள். இக்கோயிலைத் தொடர்ந்து வணங்கினால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமை தோறும் நவகிரகங்களை சுற்றி வணங்கினால் நவகிரகதோஷம் நீங்கும், ஆணவம், மாயை, கண்மம் ஆகிய மும்மலங்கள் அகலும். யோகநிலையில் இங்கு வீற்றிருக்கும் தட்சணமூர்த்தியை வணங்கினால் கல்வியில் மேன்மை கிடைக்கும். இங்குள்ள சிவனை வணங்கினால் மரண பயம் நீங்கி 16 செல்வங்களும் கிட்டும். இந்த ஆலயத்தில் வியாக்கிரபாதீஸ்வர் அறக்கட்டளையின் முயற்சியால் திருப்பணிகள் இனிதே மேற்கொள்ளப்பட்டு கடந்த 3.06.2013 அன்று சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் நடை காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் திறந்து இருக்கும்.
அமைவிடம்: நெல்லை – திருச்செந்தூர் ரயில் மார்க்கம், மற்றும் பஸ் மார்க்கத்தில் செய்துங்கநல்லூரில் இறங்கி அரை கிலோ மீட்டர் தொலைவில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உள்ளது.


