தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி தானிய வள வேளாண்மைத் திட்டம் குறித்து மத்திய அரசின் ஒருங்கிணைப்பு அலுவலர் எஸ்.வெங்கடேசபதி, பார்வையிட்டார்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் சிறப்புத் திட்டமான பிரதம மந்திரி தானிய வள வேளாண்மைத் திட்டம் (Prime Minister Dhan Dhanya Krishi Yojana) தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அகில இந்திய அளவில் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட அளவில் இதனை கண்காணிப்பதற்காக மத்திய அரசால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரான துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை செயலாளர் எஸ்.வெங்கடேசபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி தானிய வள வேளாண்மைத் திட்டம் குறித்து மத்திய அரசின் ஒருங்கிணைப்பு அலுவலர் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை செயலாளர் எஸ்.வெங்கடேசபதி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பான சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பா 1000 பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டத்தில் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டையை ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளுக்கு தார்பாலின், விசைதெளிப்பான் மற்றும் ரோட்டோவேட்டர் போன்ற வேளாண் இடுபொருட்களை மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் அவர்களால் விவசாயிகளுக்கு வழங்கினார்.
பின்னர், பாஞ்சாலக்குறிச்சி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத்திடல் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வாழையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி களத்தினை பார்வையிட்டார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சௌ.மனோரஞ்சிதம் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


