
தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக பாபநாசம் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பாபநாசம் அணையில் உள்ள உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டில் இருந்து 45 ஆயிரம் கன அடி நீர் சீறிப்பாய்கிறது.
இந்த நிலையில் மருதூர் அணைக்கட்டின் அடுத்த கிராமமான தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள அகரம் கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஊருக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போலிசார் மெயின்ரோடு வழியாக செல்லும் சாலையை பேரிகார்டு மூலம் அடைத்துள்ளனர். எனவே அகரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வல்லநாடு வழியை செல்லும் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.