கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் செயல்படாமல் உள்ள காலாவதியான சேமிப்புக் கணக்குகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனக் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்திற்கு 4 சதவீத வட்டி, ஏ.டி.எம் (ATM) வசதி, இணையதளம் மற்றும் நெட் பேங்கிங் மூலம் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பணம் செலுத்தும் படிவங்களைப் பயன்படுத்தாமல் கைரேகையைப் பயன்படுத்திப் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சேவைகளும் கிடைக்கின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.
அஞ்சலக சேமிப்புக் கணக்கில் தொடர்ந்து 3 ஆண்டுகள் எவ்விதப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை எனில், அவை காலாவதியான (Dormant/Inactive) கணக்குகளாகக் கருதப்பட்டுப் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.
தற்போது, இத்தகைய காலாவதியான கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களின்: புகைப்பட நகல், சுய சான்றொப்பமிட்ட பான் (PAN) கார்டு நகல், அடையாளச் சான்று நகல் ஆகியவற்றை அஞ்சலகத்தில் சமர்ப்பித்துத் தங்களது சேமிப்புக் கணக்கை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
பணம் செலுத்தும் படிவத்தைப் பயன்படுத்தாமல் கைரேகை மூலம் பணம் செலுத்தும் மற்றும் எடுக்கும் சேவையைப் பெற இதுவரை அடையாளச் சான்றுகள், பான் கார்டு மற்றும் கைபேசி எண்களைப் புதுப்பிக்காதவர்களும் அஞ்சலகங்களுக்குச் சென்று விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்குப் பகுதித் தபால்காரர் அல்லது அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகித் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


