தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் 4ஆம் நாளான நேற்றுநற்செய்தி பணியாளா்களுக்கான சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 16-வது தங்கத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதைத் தொடா்ந்து 4ஆம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலையில் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, பாத்திமா நகா், இனிகோ நகா், ரத்தினபுரம் ஆகிய பங்கு மக்கள், மரியின் ஊழியா் சபை அருள்சகோதரிகள், மரியன்னைக் கல்லூரி, அலாய்சியஸ் பள்ளி உள்ளிட்டவை பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது.
பின்னா், மாலையில் நடைபெற்ற நற்செய்திப் பணியாளா்களுக்கான சிறப்புத் திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசை மாணிக்கம் திருப்பலியை நிறைவேற்றி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் வழங்கினாா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக தங்கத்தேர் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் பனிமயமாதா திருவுருவமும், தங்கத்தேர் உருவமும் பொறிக்கப்பட்ட பிரத்யேக தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது.


