தூத்துக்குடி அருகே நிலத்தைக் கேட்டு பெண்ணை மிரட்டியதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன். தொழிலதிபரான இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் ஆவார். இவர், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி என்பவரின் சுமார் 4.5 ஏக்கர் நிலம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ளதாம். இந்நிலையில். மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே சென்றுகொண்டிருந்த போது, முருகேசன் காரில் வந்து அவர்கள் இருவரையும் வழிமறித்து மேற்கூறிய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


