புன்னைக்காயல் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தொம்மைசிலுவை(50). இவரது மனைவி ராஜகன்னி. இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மீன் பிடி தொழிலாளியான தொம்மைசிலுவைக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இவர் கடந்த 28ஆம் தேதி மதியம் புன்னைக்காயல் தூண்டில்பாலம் அருகே மீன்பிடிக்கப்போவதாக வீட்டில் கூறிச் சென்றாராம்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், 29ஆம் தேதி காலையில் தூண்டில் பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் கை, கால் மற்றும் காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்களுடன் தண்ணீரில் மூழ்கியபடி இறந்து கிடந்தார். இதுகுறித்து, ராஜகன்னி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


