என்எல்சி போராட்டத்தால் திமுகவின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும் சூழல் ஏற்படும் உருவாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக காலங்காலமாக தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நேரடியாக 25 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக 2 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பல தொழில் நிறுவனங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளக கிடப்பில் போடப்பட்டுள்ள தாமிரபரணி நதி இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும். தமிழகம் 4.5 லட்சம் கோடி ரூபாய் பொதுத்துறை கடன், 7.25 லட்சம் கோடி ரூபாய் நிர்வாகத்துறை எனமொத்தம் 12.53 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
இந்த கடன் சுமையை முதலில் குறைக்கவேண்டும். அதிமுக ஆட்சி கடன் வாங்கிகொண்டிருக்கிறார்கள் என குறை சொன்ன திமுக 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். பழைய கடனை அடைத்து அதற்கு வட்டி கட்டுவதற்கு 51 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழ்கம் திவாலாகிவிடும். நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.விவசாய விரோத போக்கை திமுக அரசு கடைபிடிக்க கூடாது. என்பதை எச்சரிக்கையாக கூறுகின்றேன்.
மேற்கு வங்கம் சித்தூர் நந்தி கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஒரு போக்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைபிடித்தால் தான் அவர்களது ஆட்சி பறிபோனது. என்எல்சி போராட்டத்தால் திமுகவின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும் சூழல் ஏற்படும். நிலத்தையும் மண்ணையும் மக்களையும் அளிக்கக்கூடிய திட்டம் வளர்ச்சி திட்டம் கிடையாது என்றார்.முன்னதாக அவரை மாநில பொருளாளர் திலகபாமா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர்.


