தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்து, முதல் மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்து, முதல் மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், 2024 – பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்கள் (VVPATs) ஆகியவற்றினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ் இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது 4-7-2023 காலை 9.00 மணி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்படி முதல் நிலை சரிப்பார்ப்பு பணியானது நேற்று (28-7-2023 )டன் முடிவடைந்து விட்டதால், அதை தொடர்ந்து, இன்று (29-7-2023 ) காலை 9.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவானது தேர்ந்தெடுக்கப்படும் 5% இயந்திரங்களில், 1% இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 2% இயந்திரங்களில் 1000 வாக்குகளும், 2% இயந்திரங்களில் 500 வாக்குகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிமுடிவடைந்த பின்பு, முதல் நிலை சரிப்பார்ப்பு பணியில் சரி வர செயல்படும் இயந்திரங்கள் (FLC OK units) அடங்கிய வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் சீலிடப்பட உள்ளது. அதன் பின்பு முதல் நிலை சரிப்பார்ப்பு பணி முடிவடைந்த 7 நாட்களுக்குள் முதல்நிலை சரிப்பார்ப்பு இயந்திரங்களில் பழுதடைந்த இயந்திரங்கள் பெங்களுருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


