திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். காஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர். இவர் கடந்த ஏப். 20ஆம் தேதி சோனகன்விளை நீல்புரம் பகுதியில் பைக்கில் சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (60) என்பவரது காரில் பைக் உரசியது. இதில் கண்ணனை ஜெபராஜ் தாக்கினார்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கண்ணன் ஆதரவாளர்களால் ஜெபராஜ் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்தார். அன்றைய தினம் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் எதிரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கண்ணன் (28), நம்பிராஜ் (20), சங்கரசுப்பு (32), நட்டார் ஆனந்த் (20) ஆகியோரை தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.


